ARTICLE AD BOX
கூலியில் ஆமிர்கான்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்து மாதம் 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதில் ரஜினிகாந்துடன் ஸ்ருதிஹாசன், சௌபின், நாகர்ஜுனா, உபேந்திரா, சத்யராஜ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.
இதனிடையே இத்திரைப்படத்தில் பாலிவுட் நடிகர் ஆமிர்கான், கேமியோ ரோலில் நடித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்தன. இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட ஆமிர்கான், இத்தகவலை உறுதிசெய்துள்ளார்.
எனது கதாபாத்திரம் இதுதான்…
“கூலி” திரைப்படத்தில் தான் நடித்த கேமியோ ரோல் குறித்து அப்பேட்டியில் பேசிய ஆமிர்கான், “கூலி திரைப்படத்தில் எனது கதாபாத்திரம் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும். அனைவருக்கும் பிடித்த ஒரு கதாபாத்திரமாக இருக்கும்” என்று கூறினார். இதன் மூலம் “கூலி” திரைப்படத்தில் ஆமிர்கான் நடித்துள்ளது உறுதியாகியுள்ளது. இச்செய்தியால் ரசிகர்கள் மிகவும் ஆவலோடு உள்ளனர்.
எனினும் “லியோ” திரைப்படத்தில் அனுராக் காஷ்யப்பின் கதாபாத்திரத்தை பத்து நிமிடத்தில் போட்டுத்தள்ளினார் லோகேஷ் கனகராஜ். ஆதலால் “கூலி” திரைப்படத்திலும் ஆமிர்கான் கதாபாத்திரத்தை சாகடித்துவிடுவாரோ? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
“கூலி” திரைப்படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் “கைதி 2” திரைப்படத்தை இயக்கவுள்ளார். அதன் பின் அவர் ஆமிர்கானை வைத்து ஒரு பாலிவுட் திரைப்படத்தை இயக்கவுள்ளார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு 2026 ஆம் ஆண்டு ஆகஸ்து மாதம் தொடங்கும் என ஆமிர்கான் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.