ARTICLE AD BOX
திருப்புவனம் மடப்புரம் காளியம்மன் கோவிலுக்கு தனது தாயாருடன் சென்ற நிகித்தா என்ற பெண்மணி அக்கோயிலில் உள்ள காவலாளி அஜித்குமாரிடம் தனது காரை பார்க் செய்ய சொல்லி கேட்டிருக்கிறார். கோயிலுக்குள் சென்று தரிசித்துவிட்டு திரும்பி வந்து பார்த்தபோது காருக்குள் இருந்த 10 பவுன் நகைகள் காணவில்லை என்றும் இந்த நகை திருட்டு தொடர்பாக அஜித்குமார் மீது சந்தேகம் இருப்பதாகவும் அப்பெண் போலீஸில் புகார் அளித்தார். இதனை தொடர்ந்து மடப்புரம் காளியம்மன் கோவில் தற்காலிக காவலாளி அஜித்குமாரை விசாரணைக்கு அழைத்து வந்த காவல் துறையினர் கொடூரமாக தாக்கியதில் அஜித்குமார் உயிரிழந்தார்.
இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில் சம்பந்தப்பட்ட 5 போலீஸார் மீது வழக்கு பதியபட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து மக்களிடையே நிறைய சந்தேகங்கள் எழுந்துள்ளது. கோயிலுக்கு வரும் பெண்மணிகள் 10 பவுன் நகையை கழுத்தில் அணியாமல் ஏன் காரிலேயே விட்டுவிடவேண்டும்? ஒரு மூன்றாம் நபரை அழைத்து ஏன் தனது காரை பார்க் செய்யச் சொல்ல வேண்டும்? போன்ற பல கேள்விகள் இதில் எழும்பின.

இந்த நிலையில் அஜித்குமார் மீது புகார் அளித்த நிகித்தா என்ற பெண்மணியின் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் நிகித்தா “மடப்புரம் காளியம்மன் கோயிலுக்கு தரிசனம் செய்வதற்காக வந்தோம். எனது தாயாருக்கு ஒரு மாதத்திற்கு மேல் உடல் நிலை சரியில்லை. அவருக்கு ஸ்கேன் எடுக்க சொல்லியிருந்தார் மருத்துவர். ஸ்கேனுக்காக சென்றபோது நகையை எல்லாம் கழட்டி ஒரு பையில் வைத்திருந்தோம். அந்த பையை காரின் பின் சீட்டில் வைத்திருந்தோம். திடீரென என தாயார் மடப்புரம் காளியம்மன் கோவிலுக்கு சென்று வந்த பிறகுதான் ஸ்கேன் எடுக்க ஒப்புக்கொள்வேன் என கூறிவிட்டார். ஆதலால் நகையை போடாமல் அப்படியே காளியம்மன் கோவிலுக்கு வந்தோம்” என்று அந்த வீடியோவில் பேசியுள்ளார்.