ARTICLE AD BOX
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள் எம்எல்ஏ நெல்லிக்குப்பம் புகழேந்தி.
திமுக, அதிமுக என யார் ஆட்சிக்கு வந்தாலும் சரி, மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என பல குரல்களும் வேண்டுகோளும் எழுந்து வருவது வழக்கம். அந்த வகையில் 2016 ஆம் ஆண்டு திமுக தனது தேர்தல் அறிக்கையில் டாஸ்மாக் நிரந்தரமாக மூடப்படும் என கூறியிருந்தது. ஆனால் அத்தேர்தலில் திமுக வெற்றிபெறவில்லை. அதனை தொடர்ந்து திமுக 2021 ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த பிறகு டாஸ்மாக்கை மூடுவேண்டும் என பல குரல்கள் எழுந்து வருகின்றன.

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு மேடையில் பேசிய திமுக முன்னாள் எம்எல்ஏ நெல்லிக்குப்பம் புகழேந்தி, “இதற்கு முந்தைய தேர்தலில் நாங்கள் ஆட்சிக்கு வராததற்கு என்ன காரணம் தெரியுமா? நாங்கள்தான் காரணம். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் டாஸ்மாக்கை மூடுவோம் என்று தளபதி ஸ்டாலின் கூறினார்.
அப்படி சொன்னதும், தமிழ்நாட்டு பெண்கள் எங்களுக்கு ஓட்டு போடுவார்கள் என நினைத்தோம். ஆனால் குடிகாரர்கள் எல்லாரும் சேர்ந்து என்ன செய்தார்கள் தெரியுமா? தேர்தல் நடந்த சமயத்தில் மூன்று நாட்கள் டாஸ்மாக் மூடப்பட்டது. அவர்களால் குடிக்காமல் இருக்க முடியவில்லை. 3 நாட்களே நம்மால் இருக்க முடியவில்லையே, இனி மொத்தமாக டாஸ்மாக்கை மூடினால் எப்படி இருப்பது என நினைத்து ஓட்டை மாற்றிக்குத்திவிட்டார்கள்.
இந்த தேர்தலில் டாஸ்மாக்கை மூடுவீர்களா என்று கேட்டார்கள், நாங்கள் வாயை மூடிக்கொண்டோம்” என பேசியுள்ளார்.
மேலும் பேசிய அவர், “எனக்கு மட்டும் அதிகாரம் கிடைத்தால் டாஸ்மாக்கை 24 மணி நேரமும் திறந்து வைப்பேன். இது திமுக கருத்து கிடையாது எனது கருத்து. இதை ஏன் சொல்கிறேன் என்றால் குடிகாரர்கள் யார் சொல்லியும் திருந்த மாட்டார்கள். அவனாக திருந்தினால்தான் உண்டு. நீ நாட்டுக்கே பிரயோஜனம் இல்லை, குடித்து செத்துப்போ, மீதி உள்ளவர்களை வைத்து நாங்கள் ஆட்சி நடத்திக்கொள்கிறோம்” எனவும் கூறினார். இவரின் பேச்சு தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
