ARTICLE AD BOX
திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் தொகுதிக்கு உட்பட்ட சித்தரவு கிராமம் உள்ளது. ஆத்தூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகவும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராகவும் ஐ. பெரியசாமி இருந்து வருகிறார்.
இந்த கிராமம் கொடைக்கானலில் கீழ் மலை பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. இங்கு 1வது வார்டு பகுதியில் உள்ள தெரு ஒன்றில் 30 ஆண்டுகளாக மின்சாரம் இன்றி 20க்கும் மேற்பட்ட வீடுகள் இருந்து வருகிறது.
குறிப்பாக அந்த தெருவின் முன் பகுதியில் உள்ள வீட்டின் உரிமையாளர்களின் சிலர் செய்யும் இடையூறுகளால் அப்பகுதி மக்கள் 30 ஆண்டுகளாக கரண்ட் வசதி கொடுக்க முடியாமல் இருந்து வருகிறது.
இதற்காக பலமுறை மாவட்ட ஆட்சியர், அமைச்சர் மற்றும் அதிகாரிகள் என மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் இந்த தெருவிற்கு செல்வதற்கு வரப்பு பாதை போல் 10 அடி நீளம் உள்ள பாதையே உள்ளது. இது குறித்து அப்பகுதி தமிழக வெற்றி கழக நிர்வாகிகளுக்கு தெரிய வந்துள்ளது. உடனடியாக ரூ.15,000 செலவில் 3 சோலார் தெருவிளக்குகளை வாங்கி வந்து தெருவில் பொருத்தியுள்ளனர்.

மேலும் தேவையான அடிப்படை வசதிகள் கிடைப்பதற்கும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அறிவுறுத்தலின்படி வழி ஏற்படுத்தி தருவோம் என தெரிவித்துள்ளனர்.

சோலார் விளக்கு எரிவதை கண்ட அப்பகுதி பெண் திடீரென கண்ணீர் விட்டு அனைத்து அடிப்படை வசதிகளையும் விரைவாக செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வெற்றி கழக நிர்வாகிகளிடம் கோரிக்கை வைத்தார். திடீரென பெண் அழுதது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.
