ARTICLE AD BOX
கோவை மாவட்டம் வால்பாறை அருகே கேரளா மாநிலத்திற்கு உட்பட்ட மளுக்கப்பாறை பகுதியில் மளுக்கப்பாறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அதிரப்பள்ளி பஞ்சாயத்து, வீரன் குடி மலைப்பகுதியில் இன்று அதிகாலையில் சுமார் 2.15 மணியளவில் ராகுல் என்ற 4 வயது சிறுவன் தந்தை பேபியுடன் பிளாஸ்டிக் சீட்டால் மூடப்பட்ட குடிலில் தூங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது திடீரென குடிலில் புகுந்த புலி சிறுவனின் தலையை கடித்து இழுத்துச் செல்ல முயன்றுள்ளது. அப்போது சிறுவன் அலறிய அலறல் சத்தம் கேட்டு குடும்பத்தினர் எழுந்து பார்த்த போது தனது மகனின் தலையை புலி கவ்வியுள்ளதை பார்த்து அதிர்ச்சி அடைந்து வெளியே சென்று கதறி கூச்சலிட்டுள்ளனர்.
இதில் அச்சமடைந்த புலி கவ்வி பிடித்திருந்த சிறுவனை கீழே போட்டு விட்டு மிரண்டு காட்டிற்குள் ஓடியுள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து குடும்பத்தினர் உடனடியாக அருகே உள்ள மலக்கப்பாறை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்து சம்பவ பகுதிக்கு விரைந்து சென்ற காவல் துறையினர் காயமடைந்த சிறுவனை மலக்கப்பாறை டாடா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு முதற்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சாலக்குடி தாலுக்கா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சம்பந்தப்பட்ட வனத்துறையினர் மற்றும் காவல் துறையினரும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இரவு நேரங்களில் குடில்களில் தூங்கும் போது கவனமாக தூங்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ள நிலையில் இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
