ARTICLE AD BOX
மிஷ்கினின் சர்ச்சை பேச்சுக்கள்
மிஷ்கின் சமீப காலமாக பல திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு வருகிறார். அவ்விழாக்களில் அவர் பேசுகையில் நடு நடுவே சில கெட்ட வார்த்தைகள் பேசுவது வழக்கமாகி வருகிறது. இதனால் அவர் சர்ச்சையிலும் சிக்கிக்கொள்கிறார். சமீபத்தில் ஒரு திரைப்பட விழாவில் கலந்துகொண்ட அவர் பேசிய சில வார்த்தைகள் சர்ச்சைக்குள்ளான நிலையில் மிஷ்கின் மீது பல விமர்சனங்கள் எழுந்தன. அந்த விமர்சனங்களுக்குப் பிறகு “நான் இனி அவ்வாறு வார்த்தைகளை பயன்படுத்த மாட்டேன்” என கூறியிருந்தார்.
இந்த நிலையில் இன்று நடைபெற்ற இயக்குனர் ராமின் “பறந்து போ” திரைப்படத்தின் டிரெயிலர் வெளியீட்டு விழாவில் மிஷ்கின் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

5 லட்சம் கொடுங்க…
“என்னை நிறைய சினிமா விழாக்களுக்கு அழைக்கிறார்கள். தயவு செய்து என்னை அழைக்காதீர்கள். அப்படி அழைப்பதாக இருந்தால் ஒரு 5 லட்ச ரூபாய் கொடுத்தால் நன்றாக இருக்கும். ஒரு விழாவுக்கு 5 லட்ச ரூபாய் கொடுத்தீர்கள் என்றால் வங்கியில் அதனை டெபாசிட் செய்யலாம் அல்லது எனது மகளை முதுகலை பட்டப்படிப்பு படிக்க வைக்கலாம். இந்த விழா மூலமாக இதனை கூறிக்கொள்கிறேன்.
ஒரு நாளைக்கு 5 தொலைப்பேசி அழைப்புகள் வருகின்றன. அடுத்த மாதம் நடக்கப்போகிற பட விழாவுக்கெல்லாம் இப்போதே அழைப்புகள் வருகிறது. ஆதலால் தயவுசெய்து என்னை அழைக்காதீர்கள். எனக்கு நிறைய வேலைகள் இருக்கிறது. நிறைய புத்தகங்கள் வாசித்துக்கொண்டிருக்கிறேன். இப்போதுதான் அதற்கான நேரம் அமைந்திருக்கிறது” என மிஷ்கின் கூறினார்.
ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள “பறந்து போ” திரைப்படத்தை ராமுடன் இணைந்து டிஸ்னி ஹாட்ஸ்டார் நிறுவனம் தயாரித்துள்ளது. இதில் மிர்ச்சி சிவா, அஞ்சலி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இத்திரைப்படம் வருகிற ஜூலை 4 ஆம் தேதி வெளியாகிறது. இத்திரைப்படம் ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.