ARTICLE AD BOX
சித்ரதுர்கா மாவட்டம், ஹொலல்கெரே தாலுகாவில் உள்ள தும்மி கிராமத்தைச் சேர்ந்த 23 வயது மல்லிகார்ஜுன், பெங்களூரில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். அவ்வப்போது தனது சொந்த ஊருக்கு வந்து செல்வது வழக்கம்.
கடந்த 23-ம் தேதி, நண்பர்களுடன் காரில் ஊர் திரும்பும்போது, அவரது வாகனம் லாரியுடன் மோதி விபத்துக்குள்ளானது. இதில் மல்லிகார்ஜுன் உட்பட அவரது நண்பர்கள் காயமடைந்து சித்ரதுர்கா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
மல்லிகார்ஜுனுக்கு படுகாயம் ஏற்பட்டதால், மேல் சிகிச்சைக்காக தாவணகெரே தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு நடத்தப்பட்ட ரத்தப் பரிசோதனையில், அவருக்கு எச்ஐவி பாசிட்டிவ் இருப்பது தெரியவந்தது.
இந்த தகவல் அவரது 26 வயது அக்காள் நிஷாவுக்கு தெரிந்தவுடன், குடும்பத்தின் மானம் கெடுவதாக எண்ணி மனமுடைந்தார்.மல்லிகார்ஜுனுக்கு மேல் சிகிச்சைக்காக பெங்களூர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.
நிஷா, தனது கணவர் மஞ்சுநாத்துடன் ஆம்புலன்ஸில் மல்லிகார்ஜுனை பெங்களூருக்கு அழைத்துச் சென்றார். ஆனால், பாதி வழியில் மல்லிகார்ஜுன் உயிரிழந்தார். இதையடுத்து, உடலை ஊருக்கு எடுத்து வந்து இறுதிச் சடங்குகள் நடத்தப்பட்டன.
ஆனால், மல்லிகார்ஜுனின் கழுத்தில் இருந்த காயங்கள் மற்றும் இறுக்கப்பட்டதற்கான அடையாளங்கள் அவரது தந்தை நாகராஜப்பாவுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. நிஷாவிடமும், மஞ்சுநாத்திடமும் விசாரித்தபோது, அதிர்ச்சிகரமான உண்மை வெளிப்பட்டது.
நிஷா, தந்தையிடம், “மல்லிகார்ஜுனுக்கு எச்ஐவி இருப்பது தெரிந்தால் குடும்ப மானம் பாதிக்கப்படும். மேலும், அவர் தற்கொலை செய்ய முடிவெடுத்து, தன்னை கொன்றுவிட்டு மருத்துவ சிகிச்சை பலனளிக்கவில்லை எனக் கூறுமாறு கூறினார். அதன்படி, போர்வையால் கழுத்தை இறுக்கி கொன்றோம்,” என்று ஒப்புக்கொண்டார்.

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த நாகராஜப்பா, மகள் நிஷா மற்றும் மருமகன் மஞ்சுநாத் மீது ஹொலல்கெரே காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், நிஷாவை கைது செய்தனர்.
மஞ்சுநாத் தலைமறைவாக உள்ள நிலையில், அவரைத் தேடி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், சொத்து அபகரிப்பு நோக்கத்துடன் இந்தக் கொலை நடந்திருக்கலாம் எனவும், அதை மறைக்க முயன்றதும் தெரியவந்துள்ளது.இந்த சம்பவம் கர்நாடகாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
