ARTICLE AD BOX
LGBTQIA அமைப்பினர் குறித்து சர்ச்சை கருத்து கூறிய திருமாவளவன் வருத்தம் தெரிவித்துள்ளார்.
பிப்ரவரி 12ஆம் தேதி கோவை வேளாண் பல்கலைக் கழகத்தில் நடந்த மாணவர்கள் பாராளுமன்ற என்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற திருமாவளவன், மாணவர்கள எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தார்.
அப்போது ஒரே பாலினித்தவர்களுக்கு இடையே வரும் காதல் இயக்கவியலுக்கு எதிரானது என கூறினார். இது கடும் விமர்சனங்களை எழுப்பியது.
இது குறித்து மீண்டும் பேசிய திருமாவளவன், பாலின சிறுபான்மை பிரிவினரின் மனம் நோகும்படி அமைந்துவிட்டதை எண்ணி வருத்தப்படுகிறேன், வேதனைப்படுகிறேன்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், கடந்த பிப்ரவரி 12 அன்று கோவை – வேளாண் பல்கலைக்கழகத்தில் நடந்த “மாணவர் பாராளுமன்றம்” என்னும் நிகழ்வின்போது மாணவர்கள் எழுப்பிய சில கேள்விகளுக்கு விடையளித்தேன்.
அதில் ஒரு மாணவர் எழுப்பிய வினாவுக்கு நான் அளித்த விடை, பாலினச் சிறுபான்மை பிரிவினரின் மனம் நோகும்படி அமைந்துவிட்டதாக அறிந்து வேதனைப்படுகிறேன். உள்நோக்கம் ஏதுமின்றி நான் கூறிய அக்கருத்து அவர்களின் உள்ளத்தைக் காயப்படுத்தியிருப்பதாக என் கவனத்திற்கு வந்துள்ளது. அதற்காகப் பெரிதும் வருந்துகிறேன்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 2006 இல் சட்டப் பேரவையில் முன்வைத்த கோரிக்கையின் அடிப்படையில்தான், திருநங்கையருக்கான நலவாரியம் தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்டது. ஒரு அரசியல் கட்சியில் திருநங்கையருக்கென அணி ஒன்றை உருவாக்கிய சிறப்பும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கே உண்டு.
எப்போதும் LGBTQ + தோழர்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கிற, அவர்களுக்கு இன்னல் நேரும்போதெல்லாம் ஆதரவாய் நிற்கிற கட்சியே விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகும்.
எனவே, எல்.ஜி.பி.டி.க்யூ.ஐ.ஏ+ பாலின வகையினர் உள்ளிட்ட அனைத்து விளிம்புநிலை சமூகத்தினரின் நலன்களுக்காகப் போராடும் இயக்கம்தான் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி என்பதைக் கருத்தில் கொண்டு, அத்தோழர்கள் இதனைப் பொறுத்துக்கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.