ARTICLE AD BOX
மக்களின் விருப்பத்தை பாஜக நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது என மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக நடைபெறும் கையெழுத்து இயக்கம் குறித்து மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார்.
சென்னை: மும்மொழிக் கொள்கையை ஆதரிக்கும் வகையில் தமிழக பாஜக சார்பில் சமக்கல்வி எங்கள் உரிமை என்ற தலைப்பில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், பள்ளிக்குச் செல்லும் மாணவர்களிடம் பாஜகவினர் கையெழுத்து பெறுவதாக வீடியோ வெளியானது.
இந்த நிலையில், இது குறித்து பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “குழந்தைகளிடம் கையெழுத்தே வாங்கக்கூடாது. நாங்களும் நீட் தேர்வுக்காக சுமார் 1 கோடி கையெழுத்து பெற்றோம். அப்போது, பள்ளி மாணவர்களையெல்லாம் தவிர்த்துவிட்டுதான் நாங்கள் கையெழுத்து வாங்கினோம். ஏற்கனவே மிஸ்டுகால் கொடுத்து ஒரு கோடி பேரை பாஜகவில் சேர்த்தனர். அதன் தொடர்ச்சியாகத்தான், அக்கட்சியினர் மும்மொழிக் கொள்கைக்காக மாணவர்களிடம் கையெழுத்து வாங்குவதைப் பார்க்கிறோம்” எனத் தெரிவித்தார்.
இந்த நிலையில், இதற்கு பதிலளித்த மத்திய இணையமைச்சர் எல்.முருகன், “மக்களின் வரவேற்பு இருந்து கொண்டிருக்கிறது. மக்கள் இன்று எங்களுடைய கட்சியின் வளர்ச்சியைப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இது மக்கள் விருப்பமாகவே இருக்கிறது. எனவே, மக்களின் விருப்பத்தை பாஜக நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், இது தொடர்பாக பேசியுள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, “தமிழகத்தில் பாஜக எடுத்திருக்கக்கூடிய கையெழுத்து இயக்கத்திற்கு ஆதரவு பெருகி வருவதற்கு சான்றாக, மே இறுதிக்கு முன்பே ஒரு கோடி கையெழுத்து வாங்கி விடுவோம் நிலையில் ஆதரவு உள்ளது.
இதையும் படிங்க: பாஜகவுக்காக தவம்.. 2026 தேர்தலில் இதுதான் கருப்பொருள்.. அண்ணாமலை காரசார பேச்சு!
2026ல் பாஜக ஆட்சிக்கு வந்து மும்மொழிக் கொள்கையை அமல்படுத்துவோம். நீங்கள் கொள்ளை அடிப்பதற்காக, கமிஷன் அடிப்பதற்காக ஏன் மத்திய அரசு பத்தாயிரம் கோடி கொடுக்க வேண்டும்? லோக்சபா தேர்தலுக்குப் பிறகு உறுப்பினர் சேர்க்கையை பாஜக ஆரம்பித்தோம். ஒரு கோடி உறுப்பினர்கள் சேர்ந்ததால் அவ்வளவு வாக்குகள் கிடைக்குமா என்பதை 2026 தேர்தலில் பாருங்கள்” எனக் கூறியுள்ளார்.