ARTICLE AD BOX
மடப்புரம் கோயிலில் காவலாளியாக பணியாற்றி வந்த அஜித் குமாரை, தனிப்படை போலீசார் திருட்டு வழக்கு ஒன்றின் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். அப்போது தனிப்படை போலீசார் நடத்திய கொடூர தாக்குதல் மற்றும் செய்த மோசமான சித்ரவதை காரணமாக அஜித் குமார் உயிரிழந்தார்.
இந்த விவகாரம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்லவையை ஏற்படுத்தியது. இதன்பின் தனிப்படை காவலர்கள் 5 பேரும் கைது செய்யப்பட்டனர்.
அதேபோல் அஜித் குமார் குடும்பத்தினரிடம் முதல்வர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்டதோடு, உரிய நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தரப்பில் சிபிஐ தரப்பில் ஆகஸ்ட் 20ஆம் தேதி விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது. இதன்பின் விசாரணை அதிகாரியாக டெல்லி சிபிஐ மோகித் குமார் நியமிக்கப்பட்டார்.
இதையடுத்து சிபிஐ அதிகாரி மோகித் குமார் ஜூலை 14ஆம் தேதி அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பான விசாரணையைத் தொடங்கினார். முதற்கட்டமாகத் திருப்புவனம் காவல் நிலையத்தில் 2 நாட்கள் விசாரணை நடத்திய சிபிஐ அதிகாரிகள், தொடர்ந்து அஜித் குமாரின் சகோதரர் நவீன் குமார், அஜித் குமார் நண்பர்களான ஆட்டோ ஓட்டுநர் அருண் குமார், வினோத், பிரவீன் மற்றும் கார்த்திக் ஆகியோரை விசாரித்தது.
தொடர்ந்து அஜித் குமார் செல்லும் இடங்களாக டீ கடை உள்ளிட்டவற்றிலும் விசாரணை நடத்தினர். அதுமட்டுமல்லாமல் மடப்புரம் கோயில் அஜித் குமார் கொடூரமாக அடிக்கப்பட்ட இடத்தை ஆய்வு செய்த சிபிஐ அதிகாரிகள், அவர் அணிந்திருந்த செருப்பைக் கண்டறிந்தனர். இந்த நிலையில் இன்று சிபிஐ விசாரணைக்கு நிகிதா மற்றும் அவரது தாயார் இருவரும் ஆஜராகி இருக்கின்றனர்.
