ARTICLE AD BOX
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள புள்ளான்விடுதி கிராமத்தைச் சேர்ந்தவர் வீரப்பன். இவருக்கு முருகேசன், பாஸ்கரன் என்ற இரு மகன்கள் உள்ளனர்.
முருகேசனுக்கும், விமலா இராணி என்பவருக்கும் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் முருகேசன் மாலத்தீவில் பணிபுரிந்து வந்தார்.
இதையும் படியுங்க: முதலமைச்சர் ஸ்டாலினை சந்திக்க அப்பாயிண்ட் கிடைக்குமா? காத்திருக்கும் விஜய்..!
பாஸ்கரன் சாதி மறுப்புத் திருமணம் செய்த நிலையில் அவருக்கு 5 வயதில் ஒரு மகனும் உள்ளார். சாதி மறுப்புத் திருமணம் செய்ததை பாஸ்கரனின் பெற்றோர் ஏற்காததால் அவரது மனைவி அவரைப் பிரிந்து சென்று விட்ட நிலையில் மகனுடன் பாஸ்கரன் தனது பெற்றோர் வீட்டின் மேல் புறத்தில் வசித்து வந்துள்ளார்.
அதே வீட்டில் கீழே மாமனார் மாமியாருடன் வசித்து வந்த முருகேசனின் மனைவி விமலா இராணி தான் பாஸ்கரனின் மகனையும் வளர்த்து வந்துள்ளார்.
இந்நிலையில், பாஸ்கரனுக்கும் அவரது அண்ணியான விமலா இராணிக்கும் இடையே திருமணத்தை மீறிய தகாத உறவு இருந்ததாகக் கூறப்படுகிறது. இது தெரிந்து பாஸ்கரனின் பெற்றோர் பாஸ்கரனை கண்டித்ததில், பாஸ்கரன் அவரது பெற்றோரை தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக மூத்த மகன் முருகேசனுக்குத் தகவல் தெரிந்து, அவரது மனைவியிடம் விசாரித்த போது பாஸ்கரன் தான் தன்னை வலுக்கட்டாயமாக கொடுமைப்படுத்தி உறவில் வைத்திருப்பதாகக் கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த முருகேசன், தனது மனைவி மற்றும் குழந்தைகளை அவரது பெற்றோர் வீட்டுக்கு போக சொல்லியுள்ளார்.
இதனையடுத்து, வெளிநாட்டில் இருந்து யாருக்கும் தெரியாமல் இரவு நேரத்தில் வீட்டிற்கு வந்த முருகேசன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பாஸ்கரனை கொலை செய்து விட்டு, தனது தாய் மற்றும் தந்தை உதவியோடு அவரது சடலத்தை தூக்கிச் சென்று அவரது வீட்டின் அருகே இருக்கக் கூடிய சாலையில் விபத்தில் முருகேசன் இறந்தது போல் ஏற்பாடு செய்து போட்டு விட்டு, வீட்டில் இருந்த இரத்தக் கறைகளை எல்லாம் பெற்றோரை கழுவ சொல்லி விட்டு, மீண்டும் வெளியூருக்குச் சென்று விட்டு, தம்பியின் மரணத்திற்கு வருவது போல மறுநாள் இரவு வீடு திரும்பி உள்ளார்.
பாஸ்கரனின் இறப்பு குறித்து சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்த போலீசார் குடும்பத்தினரை விசாரித்ததில் உண்மைகள் தெரிய வரவே, தற்போது பாஸ்கரனின் தந்தை வீரப்பன், தாய் வசந்தா, அண்ணன் முருகேசன் மற்றும் அண்ணி விமலா இராணி ஆகியோரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்துள்ளனர்.
கொலையையும் செய்து விட்டு, விபத்து போல் நாடகமாட முயன்ற குடும்பத்தினரின் செயல் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.