ARTICLE AD BOX
தக் லைஃப்க்கு தடை
கமல்ஹாசன் “தமிழில் இருந்துதான் கன்னட மொழி பிறந்தது” என பேசியது கர்நாடகத்தில் எதிர்ப்பலைகளை ஏற்படுத்த கர்நாடகாவைச் சேர்ந்த பலரும் “கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும், இல்லை என்றால் தக் லைஃப் படத்தை கர்நாடகாவில் வெளியிடவிடமாட்டோம்” என போர்க்கொடி தூக்கினார்கள். ஆனால் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்கமுடியாது என கூறிய நிலையில் தக் லைஃப் திரைப்படம் கர்நாடகாவில் தடை செய்யப்படும் என கர்நாடகா பிலிம் சேம்பர் அறிவித்தது.
இத்தடையை எதிர்த்து கமல்ஹாசன் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், “தமிழில் இருந்துதான் கன்னட மொழி பிறந்தது என எந்த அடிப்பையில் கூறினீர்கள்? நீங்கள் என்ன மொழியியல் ஆய்வாளரா?” என கேள்வி எழுப்பியது. மேலும் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தியது. ஆனால் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க மறுத்த நிலையில் அதன் விளைவாக “தக் லைஃப்” திரைப்படத்தின் வெளியீடு கர்நாடகாவில் ஒத்திவைக்கபட்டுள்ளது.
அதுக்கான நேரம் இது கிடையாது…
“தக் லைஃப்” திரைப்படம் கர்நாடகாவைத் தவிர உலகமெங்கும் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் இன்று “தக் லைஃப்” திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் படக்குழுவினர் பங்குபெற்றனர். அப்போது பேசிய கமல்ஹாசன், இத்திரைப்படத்தில் பணியாற்றிய நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் உழைப்பிற்கு நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார். மேலும் பத்திரிக்கையாளர்களின் ஆதரவுக்கு நன்றிகளையும் தெரிவித்தார்.
அதன் பின் பத்திரிக்கையாளர் சந்திப்பு முடிவடைந்த சமயத்தில் பத்திரிக்கையாளர்கள் பலரும் கன்னட மொழி விவகாரம் குறித்து கேள்வி கேட்க ஆவலோடு இருந்தனர். அப்போது அவர்களுக்கு பதில் கூறிய கமல்ஹாசன், “தயவு செய்து புரிந்துகொள்ளுங்கள். இது உங்களுக்கு நன்றி சொல்வதற்கும் எங்களது குதூகலத்தை பகிர்ந்து கொள்வதற்காக மட்டுமே ஏற்பாடு செய்யப்பட்ட சந்திப்பு. நாம் இன்னும் பேச வேண்டியது நிறைய உள்ளது. அது தக் லைஃப் சம்பந்தப்பட்டது அல்ல, அதை அப்புறமாக பேசுவோம். கண்டிப்பாக அதற்கு நேரத்தை ஒதுக்கித் தர வேண்டியது ஒரு தமிழனாக என் கடமை” என கூறி முடித்தார்.
மணிரத்னம் இயக்கியுள்ள “தக் லைஃப்” திரைப்படத்தில் கமல்ஹாசன், சிம்பு, த்ரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

5 months ago
48









English (US) ·