ARTICLE AD BOX
அமிதாப், ஆமீர்கான் கார்களுக்கு அபராதம்
பிரபல பாலிவுட் நடிகர்களான அமிதாப் பச்சன், ஆமிர்கான் ஆகியோரின் பெயரில் ஓடும் இரண்டு ரோல்ஸ் ராய்ஸ் கார்களுக்கு கர்நாடக மாநில போக்குவரத்து துறை ரூ.38.26 லட்சம் அபராதம் விதித்துள்ளது. ஆனால் இந்த கார்களுக்கும் அவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதுதான் இதில் டிவிஸ்ட்.

அப்படி என்ன டிவிஸ்ட்?
அதாவது இந்த இரண்டு கார்களும் ஒரு காலகட்டத்தில் அமிதாப் பச்சன், ஆமிர்கான் ஆகியோர் சொந்தமாக வைத்திருந்த கார்கள். இதில் அமிதாப் பச்சன் ரோல்ஸ் ராய்ஸ் ஃபேண்டம் என்ற மாடலை வைத்திருந்தார். ஆமிர்கான் ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் என்ற மாடலை வைத்திருந்தார். ஆனால் இந்த இரண்டு கார்களையுமே தற்போது கர்நாடகாவைச் சேர்ந்த யூசுஃப் செரிஃப் என்ற தொழிலதிபர் வைத்திருக்கிறார்.
அமிதாப் பச்சனின் ரோல்ஸ் ராய்ஸ் ஃபேண்டம் மாடல் 2021 ஆம் ஆண்டில் இருந்தும் ஆமிர்கானுக்கு சொந்தமான ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் மாடல் 2023 ஆம் ஆண்டில் இருந்தும் கர்நாடகாவை சேர்ந்த யூசுஃப் செரிஃப் பயன்படுத்தி வருகிறார். அதாவது யூசுஃப் செரிஃப் இந்த காரை வாங்கிய பிறகு அதன் ஆவணங்களை தனது பெயருக்கு அவர் மாற்றவில்லை. அந்த கார்களின் ஆவணங்கள் இப்போதும் அமிதாப் பச்சன், ஆமிர்கான் ஆகியோரின் பெயர்களிலேயே உள்ளது.
ஏன் அபராதம்?
கர்நாடக மாநிலத்தை பொறுத்தவரை பிற மாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களை கர்நாடகாவில் ஒரு வருடத்திற்கு மேல் பயன்படுத்தினால் அந்த வாகனங்களை கர்நாடகாவில் மீண்டும் பதிவு செய்ய வேண்டும். அதற்கான வரியும் கட்டவேண்டும். இப்படி ஒரு சட்டம் இருக்கிறது. இதன் அடிப்படையில்தான் யூசுஃப் செரிஃப் வைத்திருக்கும் ரோல்ஸ் ராய்ஸ் கார்களுக்கு ரூ.38.26 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அதாவது அவர் அந்த கார்களை ஒரு வருடத்திற்கும் மேலாக பயன்படுத்தியுள்ளார். ஆனால் அந்த வாகனங்களை மீண்டும் கர்நாடகாவில் அவர் பதிவு செய்யவில்லை. அதற்கு வரியும் கட்டவில்லை. இதன் காரணமாகத்தான் அவரது கார்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. இந்த கார்களின் ஆவணங்கள் இன்னும் அமிதாப் பச்சன், ஆமிர்கான் ஆகியோரின் பெயர்களில் இருப்பதனால் கர்நாடக மாநில ஆர் டி ஓ அலுவலகத்தில் ஒட்டப்பட்டுள்ள அபராத நோட்டீஸில் அமிதாப் பச்சன், ஆமிர்கான் ஆகியோரது பெயர்கள் இடம்பெற்றுள்ளது. இதுதான் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
