ARTICLE AD BOX
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் வீடு வாங்கித் தருவதாக லட்சக்கணக்கில் மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை: சென்னையின் சேத்துப்பட்டு, ஜெகநாதபுரம், இரண்டாவது தெருவைச் சேர்ந்தவர் தேவிகா (40). இவருக்கு கொளத்தூர் அடுத்த விநாயகபுரத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் வினோத் குமார் (32) என்பவருடன் அறிமுகம் கிடைத்துள்ளது. அப்போது, வினோத் குமார் தனக்கு சென்னை மாநகராட்சி அதிகாரிகள் பலரைத் தெரியும் எனக் கூறியுள்ளார்.
அது மட்டுமல்லாமல், தான் நினைத்தால் அவர்கள் மூலம் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் வீடு வாங்கித் தர முடியும் என்றும் தேவிகாவிடம் தெரிவித்துள்ளார். எனவே, இதனை நம்பிய தேவிகா, கடந்த 2023ஆம் ஆண்டு இரண்டு தவணைகளாக வினோத்குமாரிடம் 2 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் கொடுத்துள்ளார்.

ஆனால், உறுதியளித்தபடி அவர் தேவிகாவுக்கு வீடு வாங்கிக் கொடுக்காமலும், பணத்தை திரும்பக் கொடுக்காமலும் ஏமாற்றி வந்துள்ளார். எனவே, ஒருகட்டத்தில் இது குறித்து சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் தேவிகா புகார் அளித்துள்ளார். இதன்படி, வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டதில், வினோத்குமார் பணம் பெற்று மோசடி செய்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மெர்சல் படம் தோல்வியா? தயாரிப்பாளர் கொடுத்த ஷாக் பதில் : வெளியான வீடியோ!
அது மட்டுமல்லாமல், வினோத் இதே போன்று தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மற்றும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் வீடு வாங்கித் தருவதாகக் கூறி பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததும் தெரிய வந்துள்ளாது. இதனையடுத்து, வினோத் குமார் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
