ஆன்மிகத்தை அரசியலாக்குகிறார்கள்… கலவர பூமி ஆக்குவதுதான் அவர்களுடைய எண்ணம் : காங்., தலைவர்!

1 month ago 33
ARTICLE AD BOX

திருச்சி புத்தூர் பகுதியில் நடிகர் சிவாஜி கணேசன் சிலையை முதலமைச்சர் கடந்த 8ஆம் தேதி திறந்து வைத்தார். இந்த நிலையில் திருச்சியில் நேற்று காங்கிரஸ் கட்சி சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை இன்று காலை சிவாஜி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த செல்வப் பெருந்தகை,திருச்சியில் சிவாஜி சிலையை திறந்த முதலமைச்சருக்கும் அமைச்சர்களுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறோம்.

நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் கலந்து கொண்டது தொடர்பாக சிலர் புரிதல் இல்லாமல் பேசுகிறார்கள். ஒன்றிய அரசு தொடர்ந்து தமிழகத்தின் மீது தாக்குதல் நடத்துகிறார்கள். ஆனால் இந்த நிதியாண்டில் தான் எந்த நிதியும் ஒதுக்காமல் முழுமையாக தமிழ்நாட்டை புறக்கணித்து உள்ளார்கள்.

தேசிய கல்வி கொள்கை ஏற்று கொண்டால்தான் கல்வி நிதி ஒதுக்கப்படும் என கூறுகிறார்கள். இது சர்வாதிகாரம்.

காங்கிரஸ் ஆட்சியின் போது ஒரு திட்டத்தை கொண்டு வந்தோம். அந்தத் திட்டத்தை தமிழ்நாடு ஏற்றுக்கொள்ளாது என அப்போதைய முதலமைச்சர் கலைஞர் கூறினார் இருந்த போதும் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நிதியை வழங்கினோம்.

பா.ஜ.க தொடர்ந்து தமிழகத்தை புறக்கணிக்கிறது. தமிழ்நாட்டு அரசு மீதும் அமைச்சர்கள் மீதும் தமிழக அரசின் துறைகள் மீதும் தொடர் தாக்குதலை ஒன்றிய அரசு நடத்துகிறது. இதற்கு உச்ச நீதிமன்றம் சவுக்கடி தீர்ப்பு கொடுத்துள்ளது. இது மிகப்பெரிய கேடு.

மாநிலங்களுக்கான கூட்டாட்சி தத்துவத்தை பின்பற்ற மாட்டோம் எதுவாக இருந்தாலும் உச்ச நீதிமன்றத்தை நாடிதான் நீதி பெற வேண்டும் என்கிற நிலை இருந்தால் எதற்காக ஒன்றிய அரசு?

ஒன்றிய அரசு அனைத்து மாநிலங்களையும் அரவணைத்து ஆட்சி செய்ய வேண்டும். பா.ஜ.க விற்கும் அதிமுகவிற்கு வரும் தேர்தலில் தமிழக மக்கள் பதிலடி கொடுப்பார்கள்.

ஆர்.எஸ்.எஸ், பாஜக உள்ளிட்ட அமைப்புகள் ஆன்மிகத்தை அரசியலாக்குகிறார்கள். கலவர பூமி ஆக்குவது தான் அவருடைய நோக்கமாக உள்ளது.

காங்கிரஸ் கட்சி தேச பக்தர்களை கொண்ட கட்சி ஆனால் பாஜக தேசத்தை கொள்ளை அடித்து நாட்டையே துவசம் செய்யும் கட்சி. தேசத்தை கொள்ளையடிக்க வந்த திருடர்கள் தான் பாஜகவினர்.

பெரியார் தன்னுடைய ஜாதி அடையாளத்தை துறந்தவர் ஆனால் ஜாதி அடையாளத்தோடு யுபிஎஸ்சி தேர்வில் கேள்விகள் வைப்பது தமிழ்நாட்டை கலவர பூமியாக்கும் பா.ஜ.க வின் திட்டத்தின் வெளிப்பாடே வேண்டுமென்றே ஜாதி அரசியல் செய்வது பா.ஜ.க. மதரீதியாகவும், ஜாதி ரீதியாகவும், நாட்டை பிரிக்க வேண்டும் என்பதுதான் ஆர்எஸ்எஸின் அஜெண்டா அதைதான் அவர்கள் தொடர்ந்து செய்கிறார்கள்.

இந்தியா கூட்டணியை எந்த கொம்பன் வந்தாலும் அசைக்க முடியாது. இது உறுதியான கூட்டணி, தமிழக மக்களுக்கான கூட்டணி, தமிழ்நாட்டைக் கடந்து தேசத்தை பாதுகாக்கும் கூட்டணி. இந்தியா கூட்டணி எஃகு கோட்டை போல் உறுதியான கூட்டணி.
இந்த கூட்டணி உடையும் என யாரும் பகல் கனவு காண வேண்டாம்.

இந்தியா கூட்டணி கொள்கை கூட்டணி, தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்லும் கூட்டணி. பெண்களுக்கு எதிரான கட்சி தான் பா.ஜ.க. அவர்கள் பிற்போக்குவாதிகள் என்றார்.

  • editor shameer muhammed tells that working with a shankar was a terrible experience ஷங்கருடன் பணியாற்றியது மோசமான அனுபவம்- ஆதங்கத்தை கொட்டிய கேம் சேஞ்சர் எடிட்டர்! 
  • Continue Reading

    Read Entire Article