ARTICLE AD BOX
சமீப சில நாட்களில் விருதுநகர் மாவட்டத்தில் இரண்டு பட்டாசு ஆலைகளில் வெடி விபத்து ஏற்பட்டது. கடந்த ஜூலை 1 ஆம் தேதி சின்னக்காமன்பட்டியில் அமைந்துள்ள ஒரு பட்டாசு ஆலையில் வெடி விபத்து நிகழ்ந்தது. இதில் 10 பேர் உயிரிழந்தனர். அதனை தொடர்ந்து ஜூலை 6 ஆம் தேதி கீழத்தாயில்பட்டியில் அமைந்துள்ள ஒரு பட்டாசு ஆலையில் வெடி விபத்து நேர்ந்த நிலையில் ஒருவர் பலியானார்.

இவ்வாறு தொடர் வெடி விபத்துகளின் காரணமாக பட்டாசு ஆலைகளில் விதிமுறைகள் சரியான முறையில் பின்பற்றப்படுகிறதா? என ஆய்வு செய்யுமாறு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது. இந்த உத்தரவின் அடிப்படையில் 15 ஆய்வு குழுக்கள் இன்று விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள பட்டாசு ஆலைகளில் சோதனை நடத்த தொடங்கினார்கள். இந்த நிலையில் இன்று 200க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் மூடப்பட்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஆய்வுக்கு அஞ்சி பட்டாசு ஆலைகள் மூடப்பட்டதாக கூறப்படுகிறது.
விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி, சாத்தூர் ஆகிய பகுதிகளின் அருகே பல பட்டாசு ஆலைகள் அமைந்துள்ள நிலையில் 200க்கும் மேறபட்ட பட்டாசு ஆலைகள் இன்று மூடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
