ARTICLE AD BOX
ஆர்யாவுக்குச் செந்தமான உணவகங்கள்
தமிழ் சினிமாவில் 20 ஆண்டுகளாக கதாநாயகனாக வலம் வருபவர் ஆர்யா. தொடக்கத்தில் பல திரைப்படங்கள் அவரது கெரியருக்கு உதவினாலும் சமீபத்தில் அவர் நடித்த எந்த திரைப்படமும் வேலைக்கு ஆகவில்லை. எனினும் தற்போதும் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
அடுத்ததாக “Mr X”, “அனந்தன் காடு” போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார் ஆர்யா. இவர் நடிப்பது மட்டுமல்லாது பல திரைப்படங்களை தயாரித்தும் வருகிறார். இதனையும் தாண்டி ரியல் எஸ்டேட் தொழிலிலும் ஈடுபட்டு வருகிறார். அதே போல் சென்னையில் சீ ஷெல் என்ற பெயரில் உணவகங்கள் நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
வரி ஏய்ப்பு
இந்த நிலையில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாகவும் வரி ஏய்ப்பு செய்துள்ளதாகவும் ஆர்யா மீது புகார் எழுந்துள்ளது. அந்த வகையில் கொச்சியில் இருந்து வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் சென்னையில் அண்ணா நகர், வேளச்சேரி, கொட்டிவாக்கம், கீழ்ப்பாக்கம் போன்ற பகுதிகளில் அமைந்துள்ள ஆர்யாவுக்கு சொந்தமான உணவகங்கள் என கூறப்படும் சீ ஷெல் உணவகங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.
அது என்னுடைய ஹோட்டல் இல்லை
இதனை தொடர்ந்து ஆர்யா தற்போது இதற்கு விளக்கம் அளித்துள்ளார். அதாவது சில ஆண்டுகளுக்கு முன்பாகவே சீ ஷெல் உணவகங்களை குன்ஹி மூசா என்பவருக்கு விற்றுவிட்டதாகவும் இப்போது அது தனக்கு சொந்தமான உணவகங்கள் இல்லை எனவும் ஆர்யா கூறியுள்ளார். ஆர்யாவிடம் இருந்து ஹோட்டலை வாங்கிய குன்ஹி மூசா வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.