ARTICLE AD BOX
நிறைவேற்றப்பட்ட வக்ஃபு வாரிய மசோதா
இன்று மக்களவையில் ஒன்றிய பாஜக அரசால் வக்ஃபு வாரிய சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மசோதா சிறுபான்மை மக்களுக்கு எதிரான சட்டம் என திமுக உட்பட பல எதிர்கட்சிகள் கண்டனமும் எதிர்ப்பும் தெரிவித்து வரும் நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தற்போது இது குறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
அரசியலமைப்பின் மீது களங்கம்
“ஒன்றிய பாஜக அரசால் மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ள வக்ஃபு சட்டத் திருத்த மசோதா மதச்சார்பற்ற இந்திய ஜனநாயகத்தின் அடிப்படைக் கொள்கைகளையும் அரசியலமைப்பின் மாண்பையும் மீண்டும் ஒரு முறை கேள்விக்கு உள்ளாக்கியுள்ளது. ஒன்றியத்தில் ஆளும் பாஜக அரசு தொடர்ந்து அரசியலமைப்பின் மீது களங்கம் ஏற்படுத்தி வரும் ஒரு மோசமான போக்காக வக்ஃபு வாரிய சட்டத் திருத்த மசோதாவை நிறைவேற்றியுள்ளது” என அந்த அறிக்கையில் விஜய் கூறியுள்ளார்.
இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பில்லை
மேலும் அந்த அறிக்கையில், “ஒன்றிய பாஜக அரசு மேற்கொண்டு வரும் பெரும்பான்மைவாத மற்றும் பிளவுவாத அரசியலானது இஸ்லாமிய சகோதரர்களைத் தொடர்ச்சியாக பாதுகாப்பற்ற நிலையிலும் அச்சத்திலும் உறைய வைத்திருக்கும் உளவியல் தாக்குதலன்றி வேறென்ன?” எனவும் விஜய் கேள்வி எழுப்பியுள்ளார்.
பெரும்பாமைவாத ஆதிக்க அரசியல்
“இஸ்லாமியச் சிறுபான்மையினரின் நலன் காக்கவே இச்சட்டத் திருத்தம், எதிர்கட்சியினர் அவர்களை தவறாகத் திசைதிருப்புகிறார்கள் என்ற வெற்று வாதத்தை ஒன்றிய ஆளும் கட்சியினர் முன்வைக்கின்றனர். ஒன்றிய பாஜக அரசு சொல்வது போல் இது இஸ்லாமியர்களின் நலம் காக்கும் சட்டம் என்பது உண்மையானால் அதைத் தாக்கல் செய்யக் கூட அவர்களிடம் ஏன் இஸ்லாமிய பிரதிநிதி ஒருவர் கூட இல்லை? ஜனநாயக அவையில் அதுபற்றி விவாதிக்கப் போதுமான இஸ்லாமிய உறுப்பினர்கள் இல்லையே ஏன்?” என்று அந்த அறிக்கையில் கேள்வி எழுப்பியுள்ள விஜய், இதுதான் இன்று பாஜக அரசு நிறுவியுள்ள மிக மோசமான பெரும்பான்மைவாத ஆதிக்க அரசியல்” என்றும் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
வன்மையான கண்டனங்கள்
மேலும் அந்த அறிக்கையில், “நமது நாட்டின் ஒட்டுமொத்த ஜனநாயக விழுமியங்களையும் மறுத்து தனது பெரும்பான்மைவாத ஆதிக்கத்தின் துணையோடு இஸ்லாமியச் சகோதரர்களுக்கு எதிரான அரசியலை கையில் எடுத்துள்ள ஒன்றிய பாஜக அரசுக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் வன்மையான கண்டனங்கள். நாட்டின் ஒட்டுமொத்த ஜனநாயக குரல்களுக்கும் செவிமடுக்கும் விதமாக ஜனநாயகத்திற்கு விரோதமான இந்த சட்டத் திருத்த மசோதாவை உடனே திரும்ப பெற வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகம் வலியுறுத்துகிறது” என கூறியுள்ள விஜய், “ஒன்றிய பாஜக அரசு இதனைச் செய்யாத பட்சத்தில் இஸ்லாமிய சகோதரர்களோடு இணைந்து அவர்களின் வக்ஃபு உரிமைச் சட்டப் போராட்டத்தில் தமிழக வெற்றிக் கழகமும் பங்கேற்றுப் போராடும்” என்றும் அந்த அறிக்கையில் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

7 months ago
102









English (US) ·