ARTICLE AD BOX
ரணகளமான ஆக்சன்
ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் நடிப்பில் இன்று உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியான திரைப்படம் “மதராஸி”. இத்திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ருக்மிணி வசந்த் நடித்துள்ளார். “துப்பாக்கி” படத்தில் வில்லனாக நடித்த வித்யுத் ஜம்வால் இத்திரைப்படத்திலும் வில்லனாக நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் விக்ராந்த், பிஜு மேனன், ஷபீர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
அனிருத் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். சுதீப் எலாமன் இத்திரைப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். ஸ்ரீலட்சுமி மூவீஸ் நிறுவனம் இத்திரைப்படத்தை தயாரித்துள்ளது. இத்திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில் இத்திரைப்படம் பந்தயம் அடித்ததா இல்லையா என்பதை குறித்து பார்க்கலாம்.

படத்தின் கதை
தமிழ்நாட்டில் துப்பாக்கிகளை வைத்து வன்முறைகளை கட்டவிழ்த்துவிட ஒரு கும்பல் வட மாநிலத்தில் இருந்து 5 கன்டெயினர்களில் துப்பாக்கிகளோடு தமிழ்நாட்டிற்குள் நுழைய முயல்கிறார்கள். NIA-ஐ சேர்ந்த அதிகாரிகளான பிஜு மேனனும், விக்ராந்தும் அந்த கன்டெயினர்களை தடுக்க முயல்கிறார்கள். ஆனால் அவர்களால் ஒரு கன்டெயினரை மட்டுமே தடுக்க முடிகிறது. மற்ற நான்கு கன்டெயினர்களும் தமிழ்நாட்டிற்குள் வந்துவிடுகிறது. அந்த கும்பலுக்கும் NIA-க்குமான மோதலில் பிஜு மேனனுக்கு பலத்த காயம் ஏற்பட அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்.
இது ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் தன்னை காதலித்த ருக்மிணி வசந்த் தன்னை விட்டு பிரிந்துவிட்ட வேதனையில் சிவகார்த்திகேயன் தற்கொலை செய்துகொள்வதற்காக பாலத்தில் இருந்து குதிக்கிறார். அவருக்கு பலத்த அடிபட பிஜு மேனன் அனுமதிக்கப்பட்டுள்ள அதே மருத்துவமனையில் சிவகார்த்திகேயனும் அனுமதிக்கப்படுகிறார்.
மீதமுள்ள நான்கு கன்டெயினர்கள் ஒரு ஃபேக்டரியில் இருப்பதாக மருத்துவமனையில் இருக்கும் பிஜு மேனனுக்கு தகவல் வருகிறது. இந்த சமயத்தில் சிவகார்த்திகேயன் அம்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட இருவரும் சந்தித்துக்கொள்கிறார்கள். சிவகார்த்திகேயன் எப்படியாவது தற்கொலை செய்துகொள்ள வேண்டும் என முயன்றுகொண்டிருப்பதை அறியும் பிஜு மேனன், அந்த ஃபேக்டரியை வெடிக்க வைக்க சிவகார்த்திகேயனை அந்த ஃபேக்டரிக்குள் அனுப்ப முடிவு செய்கிறார். சிவகார்த்திகேயன் அந்த ஃபேக்டரிக்குள் நுழையும் சமயத்தில் இவரை தேடி ருக்மிணி திரும்ப வந்துவிடுகிறார். கன்டெயினர் அழிக்கப்பட்டதா? ஃபேக்டரிக்குள் சென்ற சிவகார்த்திகேயன் என்ன ஆனார்? இதுதான் மீதி கதை.

படத்தின் பிளஸ்
சிவகார்த்திகேயன்-ருக்மிணியின் காதல் காட்சிகள் மிகவும் ரசிக்கும்படியாக இருக்கின்றன. சிவகார்த்திகேயன் ஸ்டண்ட் காட்சிகளில் அதகளம் செய்திருக்கிறார். சுதீப்பின் கேமரா ஆக்சன் காட்சிகளில் புகுந்து விளையாடியிருக்கின்றன. படத்தின் கதை மிகவும் சுவாரஸ்யமாகவே உள்ளது.
சிவகார்த்திகேயன் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். வில்லன் வித்யுத் ஜம்வாலை விட ஷபீர் வில்லத்தனமான நடிப்பில் ரசிக்க வைக்கிறார்.
படத்தின் மைனஸ்
என்னதான் படத்தின் கதை சுவாரஸ்யமாக இருந்தாலும் படத்தின் திரைக்கதையில் சற்று சொதப்பிவிட்டார் முருகதாஸ். குறிப்பாக படத்தில் எந்தவிதமான லாஜிக்கும் இல்லை. படம் போகிற ஸ்பீடில் லாஜிக்கெல்லாம் பார்க்க மாட்டார்கள் என நினைத்தாரா என்று தெரியவில்லை. ஆனால் படத்தின் திரைக்கதை மெதுவாக நகர்வதால் லாஜிக் மீறல்களும் தெள்ள தெளிவாக தெரிகின்றன.
வித்யுத் ஜம்வால் இதில் வில்லனாக நடித்துள்ளார் என்பதால் சண்டை காட்சிகள் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டன. ஆனால் இருவரும் அடிக்கடி சண்டைப்போட்டுக்கொண்டே இருக்கின்றனர். இது பார்வையாளர்களுக்கு சோர்வை ஏற்படுத்துகிறது. மேலும் அனிருத்தின் பின்னணி இசை ரசிக்கும்படியாகவும் இல்லை.
எனினும் சிவகார்த்திகேயனின் ஸ்கிரீன் பிரசன்ஸுக்காகவும் ருக்மிணி வசந்தின் கிரங்கடிக்கும் அழகுக்காகவும் இப்படத்தை தாராளமாக பார்க்கலாம். அதை தாண்டி ஒரு Above Average திரைப்படம்தான் “மதராஸி”.
