ARTICLE AD BOX
அன்டர்ரேட்டட் இசையமைப்பாளர்?
“ஓர் இரவு” என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் சாம் சிஎஸ். அதனை தொடர்ந்து “விக்ரம் வேதா”, “கைதி” போன்ற திரைப்படங்களில் தனது அசரவைக்கும் பின்னணி இசையால் மாஸ் காட்டினார். தமிழில் பல திரைப்படங்களுக்கு இவர் இசையமைத்திருந்தாலும் இவருக்கு பெரிய ஹீரோக்களின் திரைப்படங்களில் இசையமைக்கும் வாய்ப்பு அமையவில்லை. இவ்வாறு திறமையான ஒரு இசையமைப்பாளர் அன்டர்ரேட்டடாக இருப்பது சோகமான ஒன்று என ரசிகர்கள் பலரும் கூறி வருகின்றனர்.
இதைடையே சாம் சிஎஸ், “மகாவதார் நரசிம்மா” என்ற திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் ஒரு அனிமேஷன் திரைப்படமாகும். மஹாவதார் என்ற பெயரில் விஷ்ணுவின் பத்து அவதாரங்களும் அனிமேஷனில் உருவாகவுள்ளது. அதில் முதல் பாகம்தான் “மகாவதார் நரசிம்மா”. இத்திரைப்படம் கடந்த ஜூலை 25 ஆம் தேதி வெளியானது. இத்திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் ஓரளவு நல்ல வரவேற்பையே பெற்றுள்ளது.

இந்த நிலையில் இத்திரைப்படம் வெளியாவதற்கு முன்பு சாம் சிஎஸ் ஒரு யூட்யூப் சேன்னலுக்கு அளித்த பேட்டி ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
யாரும் மதிக்க கூட மாட்டாங்க?
“மகாவதார் நரசிம்மா படத்தை யாரும் மதிக்கமாட்டார்கள். இது ஏதோ சோட்டா பீம்மின் Higher version என்றுதான் நினைத்துக்கொள்வார்கள். ஆனால் இத்திரைப்படம் வெளியான பின்பு இதற்கென்று ஒரு மார்க்கெட் ஓபன் ஆகும். இத்திரைப்படத்தை தயாரித்த ஹொம்பாலே நிறுவனம் இத்திரைப்படத்தின் தொடர்ச்சியாக 9 திரைப்படங்களை தயாரிக்க உள்ளார்கள். ஒவ்வொரு இரண்டு வருடத்திற்கும் ஒரு அவதாரத்தை பற்றிய திரைப்படம் வெளிவரும். மிகப் பெரிய பொருட்செலவில் இதனை தயாரிக்கிறார்கள். ஒரே இயக்குனருடன் 2045 ஆம் ஆண்டு வரை இதற்கான ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது” என சாம் சிஎஸ் அப்பேட்டியில் கூறினார். அவர் கூறியது போலவே இத்திரைப்படம் ஓரளவு நல்ல வரவேற்பையே பெற்றுள்ளது.

“மகாவதார் நரசிம்மா” திரைப்படத்தை அஷ்வின் குமார் என்பவர் இயக்கியுள்ளார். “கேஜிஃப்”, “காந்தாரா” ஆகிய திரைப்படங்களை தயாரித்த ஹொம்பாலே நிறுவனம் இத்திரைப்படத்தை தயாரித்துள்ளது.
