ARTICLE AD BOX
உலக அழகி…
உலக அழகி என்ற பட்டத்தை பெற்ற ஐஸ்வர்யா ராய், “இருவர்” திரைப்படத்தின் மூலம் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர். அதனை தொடர்ந்து பாலிவுட்டில் பட்டையை கிளப்பிய ஐஸ்வர்யா ராய் தமிழில் அவ்வப்போது “ஜீன்ஸ்”, “எந்திரன்”, “இராவணன்” போன்ற படங்களில் தலைகாட்டினார். அதனை தொடர்ந்து “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தில் அவர் ஏற்று நடித்த நந்தினி கதாபாத்திரம் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் ஐஸ்வர்யா ராய் தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அனுமதி இன்றி பயன்படுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.

வழக்கின் சாராம்சம் என்ன?
இது குறித்து அவர் அளித்த மனுவில், தனது அனுமதியின்றி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் விளம்பரங்களில் பயன்படுத்தப்படுகிறது எனவும் வணிக நோக்கங்களுக்காக தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அனுமதி இன்றி பயன்படுத்தப்படுவதை தடை செய்ய வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கில் ஐஸ்வர்யா ராய் சார்பாக நீதிமன்றத்தில் ஆஜர் ஆன வழக்கறிஞர் சந்தீப் சேதி, “ஐஸ்வர்யா ராயின் மார்ஃபிங் செய்யப்பட்ட படங்கள் AI மூலமாக உருவாக்கப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன. இது முற்றிலும் உண்மைக்கு மாறானவை. ஐஸ்வர்யா ராயின் முகத்தை வைத்து பணம் சம்பாதிக்கிறார்கள்” என வாதாடினார். இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், ஐஸ்வர்யா ராயின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அனுமதியின்றி பயன்படுத்துவதை தடுக்க இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும் என உறுதியளித்துள்ளது.
