ARTICLE AD BOX
படுதோல்வியடைந்த இந்தியன் 2
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 2024 ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான “இந்தியன் 2” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் மிக மோசமான வரவேற்பையே பெற்றது. ரூ.300 கோடி பொருட்செலவில் உருவான இத்திரைப்படம் ரூ.150 கோடிகளையே வசூல் செய்தது. இதனால் இத்திரைப்படத்தை தயாரித்த லைகா நிறுவனத்திற்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து “இந்தியன் 3” பட விவகாரத்தில் சுபாஸ்கரனுக்கும் ஷங்கருக்கும் இடையே பிரச்சனைகள் தலைதூக்கின. “இந்தியன் 3” திரைப்படத்திற்காக சில காட்சிகள் ஏற்கனவே படமாக்கப்பட்டிருந்தன. மீதமுள்ள காட்சிகளை படமாக்க ஒரு குறிப்பிட்ட தொகையை பட்ஜெட்டாக கேட்டிருந்தாராம் ஷங்கர்.

ஆனால் ஏற்கனவே “இந்தியன் 2” திரைப்படத்தால் நஷ்டம் ஏற்பட்டிருக்கும் நிலையில் ஷங்கர் கேட்ட பட்ஜெட் தொகைக்கு லைகா சுபாஸ்கரன் ஒப்புக்கொள்ளவில்லை என கூறப்படுகிறது. மேலும் இதுவரை படமாக்கப்பட்ட “இந்தியன் 3” படத்தின் காட்சிகளை திரையிட்டு காட்டுமாறும் சுபாஸ்கரன் கேட்டிருந்தாதாகவும் ஆனால் ஷங்கர் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை எனவும் கூறப்பட்டது. இவ்வாறு இருவருக்கும் இடையே பிரச்சனைகள் உருவானது.
தூது சென்ற ரஜினிகாந்த்!
இந்த நிலையில் தயாரிப்பாளர் சுபாஸ்கரன் “இந்தியன் 3” திரைப்படத்தை விரைவில் முடித்து தருமாறு ஷங்கரிடம் பேச ரஜினிகாந்தை தூது அனுப்பியதாக ஒரு தகவல் வெளிவருகிறது. அதாவது லைகா சுபாஸ்கரன் ரஜினிகாந்தை தொடர்புகொண்டு, “இந்தியன் 3 படத்திற்காக நிறைய பணத்தை முதலீடு செய்துள்ளோம். ஆனால் படம் முடங்கி கிடக்கிறது. நீங்கள் ஷங்கரிடம் பேசி சீக்கிரம் படத்தை முடித்துக்கொடுக்கச் சொல்லுங்கள்” என கேட்டுக்கொண்டாராம்.
சுபாஸ்கரன் மீதான நட்பின் அடிப்படையில் ஷங்கரை சென்று பார்த்தாராம் ரஜினிகாந்த். ஷங்கரிடம் “இந்தியன் 3” குறித்து பேச வந்ததாக கூறி சுபாஸ்கரனின் நிலையை கூறினாராம். அதற்கு ஷங்கர், “இந்தியன் 3 படத்தில் கிராபிக்ஸிற்கான செலவு நீங்கலாக படப்பிடிப்பிற்கு மட்டுமே ரூ.6 கோடி தேவை” என கூறினாராம்.

உடனே ரஜினிகாந்த் ஷங்கர் வீட்டில் இருந்தே சுபாஸ்கரனுக்கு தொடர்புகொண்டாராம். “ஷங்கர் இந்தியன் 3 படத்தை முடித்து தர ரூ.6 கோடி ஆகும் என கூறுகிறார்” என ரஜினிகாந்த் சுபாஸ்கரனிடம் சொல்ல, அதற்கு சுபாஸ்கரன், “ரூ.6 கோடி எல்லாம் எங்களால் முதலீடு செய்ய முடியாது. வேண்டுமென்றால் ஒன்றரை கோடி ரூபாய்க்கு முடிக்கச் சொல்லுங்கள்” என கூறினாராம். ஆனால் ஷங்கருக்கு இது உவப்பான ஒன்றாக இல்லையாம்.
மேலும் “இந்தியன்” 2,3 ஆகிய திரைப்படங்களில் இணை இயக்குனர்களாக பணியாற்றிய அறிவழகன், வசந்தபாலன் ஆகியோருக்கு சுபாஸ்கரன் இன்னும் சம்பளம் தரவில்லையாம். அதை கொடுக்கச் சொல்லுங்கள் என ஷங்கர் கேட்டாராம். ஷங்கரின் கோரிக்கையை சுபாஸ்கரனிடம் கூறியுள்ளாராம் ரஜினிகாந்த். இந்த பேச்சுவார்த்தையின் முடிவு என்ன என்பது இனிமேல் தான் தெரிய வரும் என கூறப்படுகிறது.
