ARTICLE AD BOX

ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர் என்ற பாதுகாப்பில் மிகுந்த ஆணவத்தோடு திமுக மாணவர் அணி தலைவர் ராஜீவ் காந்தி பேசியுள்ளதாக காங்கிரஸ் மாணவர் அணி தலைவர் சின்னத்தம்பி குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை: இது தொடர்பாக தமிழ்நாடு மாணவர் காங்கிரஸ் அணியின் தலைவர் மா.சின்னதம்பி வெளியிட்டுள்ள அறிக்கையில், “திமுக இளைஞரணி அலுவலகமான அன்பகத்தில் நடைபெற்ற ஒரு நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றிய திமுக மாணவரணி தலைவர் ராஜிவ்காந்தி, பெருந்தலைவர் காமராஜரை இழிவுபடுத்தி பேசியிருக்கிறார்.
அவர் வரம்பை மீறி, ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர் என்ற பாதுகாப்பில் மிகுந்த ஆணவத்தோடு கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியினரின் மனம் புண்படுமாறு பேசியிருப்பதை வன்மையாகக் கண்டிக்க விரும்புகிறேன். இப்படி பேசுவதற்கு அவருக்கு எப்படி துணிவு வந்தது என்று தெரியவில்லை. நாம் தமிழர் கட்சியில் இருந்த போதே திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்ட தலைவர்களையெல்லாம் நாக்கில் நரம்பின்றி மிகமிக கீழ்த்தரமாக பேசியவர். அங்கிருந்து சீமானால் விரட்டப்பட்டு, திமுகவில் தஞ்சம் புகுந்தவர் தான் ராஜிவ்காந்தி.
இத்தகைய பின்னணி கொண்ட ஒருவர் பெருந்தலைவர் காமராஜரைப் பற்றி பேசுவதற்கு எந்த அருகதையும் இல்லை.பெருந்தலைவர் காமராஜர் 1954ஆம் வருடம் தமிழ் புத்தாண்டு தினமான ஏப்ரல் 13 அன்று முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார் என்ற செய்தி கிடைத்தவுடன் ஆதரிக்க தொடங்கிய பெரியார், காமராஜர் ஆட்சி செய்த ஒன்பதரை ஆண்டுகாலமும் பாராட்டி பேசியதை எவரும் மறந்திட இயலாது. 1961ஆம் ஆண்டில் காரைக்குடியில் நடைபெற்ற கூட்டத்தில், தமிழ்நாடு உருப்பட வேண்டுமானால் இன்னும் 10 ஆண்டுகளுக்கு காமராஜரை கெட்டியாக பிடித்துக் கொள்ளுங்கள், அவரை விட்டால் தமிழர்களுக்கு வேறு ஆளே சிக்காது என்று பேசி 1962 தேர்தலில் காங்கிரசின் வெற்றிக்காக தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் பரப்புரை மேற்கொண்டவர் பெரியார்.

அவரும், பெருந்தலைவர் காமராஜரும் ஒருவரை ஒருவர் சந்திக்காமலேயே எந்தளவிற்கு காமராஜர் ஆட்சியை எப்படி தாங்கி பிடித்தார் என்ற வரலாறெல்லாம் ராஜிவ்காந்தி போன்றவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை.1954இல் காமராஜர் முதலமைச்சரானதும் குடியாத்தம் இடைத் தேர்தலில் போட்டியிட்ட போது, கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஒருவரைத் தவிர எவரும் எதிர்த்து போட்டியிடவில்லை. பெரியார் தீவிரமாக ஆதரித்தார்.
திமுக அதிகாரப்பூர்வமாக ஆதரிக்கவில்லையே தவிர, அண்ணா, குணாளா, குலக்கொழுந்தே என்று எழுதி ஆதரித்தார். இத்தகைய வரலாற்று பின்னணியோடு தான் பெருந்தலைவர் காமராஜர் தமிழக அரசியலில் கம்பீரமாக வலம் வந்தார். தமிழகத்தில் காமராஜரின் ஒன்பதரை ஆண்டுகால ஆட்சியை பொற்கால ஆட்சி என்று நேரு உள்ளிட்ட அனைத்து கட்சித் தலைவர்களும் சான்றிதழ் கொடுத்த நிலையில், அதை உறுதி செய்து தீவிர பரப்புரை மேற்கொண்டவர் பெரியார்.
இதையும் படிங்க: கைகோர்த்த ஸ்டாலின் – சந்திரபாபு நாயுடு.. தென் மாநிலங்களில் இப்படி ஒரு நிலையா?
ஒருமுறை காமராஜர் ஆட்சியைப் பற்றி குறிப்பிடும் போது, ஈராயிரம், மூவாயிரம் ஆண்டுகளாக சேர, சோழ, பாண்டியர் ஆட்சிக் காலத்தில் நிகழாத அற்புதங்களெல்லாம் காமராஜர் ஆட்சியில் நிகழ்கிறது என்று வாழ்த்தி மகிழ்ந்தவர் பெரியார். அவர் சொல்லித் தான் அன்று முதலமைச்சர் காமராஜர் பள்ளிகளைத் திறந்தார் என்று கூறுவது அரசியல் அறியாமையை காட்டுகிறது.
தமிழகத்தின் வளர்ச்சித் திட்டங்களை காமராஜரின் சொந்த பணத்தை கொண்டா நிறைவேற்றினார் என்று கூறுவது மல்லாந்து படுத்துக் கொண்டு எச்சில் துப்புவது போல் இருக்கிறது. இவரைப் போன்றவர்கள் இப்படி பேச திமுக தலைமை அனுமதிக்குமேயானால், தமிழகத்தில் இந்தியா கூட்டணிக்கு இதைவிட பெரும் கேடு இருக்க முடியாது. இத்தகைய வரம்பு மீறி பேசிய ராஜிவ்காந்தியை அடக்கி வைப்பது கூட்டணி தர்மத்திற்கு உகந்ததாக இருக்கும் என்று தெரிவித்துக் கொள்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.
The station இந்தியா கூட்டணிக்கு பெரும் கேடு.. காங்கிரஸ் தலைவர் பகீர் குற்றச்சாட்டு appeared archetypal connected Update News 360 | Tamil News Online.