ARTICLE AD BOX
திருச்சி சரக டிஐஜி வருண்குமார் மற்றும் அவரது மனைவியும் ஐபிஎஸ் அதிகாரியமான வந்திதா பாண்டேவை உள்ளிட்ட அவரது குடும்பத்தினரை பற்றி நாம் தமிழர் கட்சியினர் சமூக வலைதளங்களில் அவதூறாக பேசியதாக வருண் குமார் திருச்சி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார்.
இந்த வழக்கு மீதான விசாரணை திருச்சி குற்றவியல் நீதிமன்றம் 4ல்நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் வருண்குமார் ஆகிய இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நீதிமன்றம் சம்மன் அனுப்பியிருந்தது.
இதையும் படியுங்க: கசிந்த தகவல்..அமைச்சர் கேஎன் நேரு வீட்டில் அமலாக்கத்துறை அதிரடி ரெய்டு!
இதையடுத்து நீதிமன்ற உத்தரவின்படி டிஐஜி வருண் குமார் கடந்த மாதம் 19ம் தேதி அன்று நீதிமன்றத்தில் ஆஜரானார். ஆனால் சீமான் சம்மனை வாங்க மறுத்து திருப்பி அனுப்பி விட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் வழக்கு விசாரணைக்காக இருவரும் மீண்டும் ஏப்ரல் மாதம் 7ந் தேதி இன்று ஆஜராகுமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
ஆனால் சீமான் இன்று ஆஜராகவில்லை அவரது சார்பாக அவரது வழக்கறிஞர் மட்டுமே வருகை தந்திருந்தனர். வழக்கில் இன்று மாலை 5மணிக்குள் சீமான் நேரில் ஆஜராக வேண்டும் இல்லாவிடில் சீமானுக்கு பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பிக்கப்படும் என திருச்சி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி பாலாஜி கடுமையாக எச்சரித்தார்.

இந்த நிலையில் இன்று மாலை 5 மணிக்கு சீமான் ஆஜர் ஆகிறாரா அல்லது அவரது வழக்கறிஞர் மூலமாக காரணங்கள் ஏதும் மனுவாக வழங்கி வேறு ஒரு நாளில் ஆஜர் ஆவாரா என்பது சில மணி நேரங்களில் தெரியவரும்.
