ARTICLE AD BOX
குட் பேட் அக்லி
வருகிற 10 ஆம் தேதி அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இத்திரைப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். இதில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ள நிலையில் பிரபு, பிரசன்னா, அர்ஜூன் தாஸ், சுனில் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

ஜிவி பிரகாஷ் இசையில் இரண்டு பாடல்கள் சிங்கிள்களாக வெளிவந்து ரசிகர்களை ஆட்டம் போட வைத்தது. இத்திரைப்படத்தின் டிரைலர் வருகிற 3 ஆம் தேதி வெளிவரவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இத்திரைப்படத்தின் இயக்குனரான ஆதிக் ரவிச்சந்திரன் சமீபத்தில் ஒரு விழாவில் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர் “குட் பேட் அக்லி” திரைப்படத்தை குறித்த பல தகவல்களை பகிர்ந்துகொண்டார்.
ஓரே நாள்ல ரெண்டு ஷூட்டிங்…
“ஒவ்வொரு நாளும் அஜித் சாருடன் படப்பிடிப்பு தளத்தில் கூடவே இருந்தது மறக்கமுடியாத அனுபவமாகும். ஒவ்வொரு நாளும் அவர் கொடுத்த அன்பை நினைக்கும்போது நான் பெரிய பாக்கியம் செய்தவனாக உணர்கிறேன்.

விடாமுயற்சியும் குட் பேட் அக்லியும் ஒரே சமயத்தில் படமாக்கப்பட்டது. அந்த சமயத்தில் காலை 9 மணி முதல் மாலை 6 மணிவரை விடாமுயற்சி படப்பிடிப்பில் நடித்துவிட்டு மாலை 6 மணியில் இருந்து காலை 6 மணி வரை நமது குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடித்துக்கொடுத்தார். அந்தளவுக்கு அஜித்குமார் ஒரு பெரிய உழைப்பாளி. அஜித் சாரால்தான் அது முடியும்” என ஆதிக் ரவிச்சந்திரன் கூறியுள்ளார்.
எகிறும் எதிர்பார்ப்பு
அஜித்குமார் நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் வெளிவந்த “விடாமுயற்சி” திரைப்படம் சுமாரான வரவேற்பையே பெற்ற நிலையில் ரசிகர்கள் பலரும் “குட் பேட் அக்லி” திரைப்படத்திற்காக ஆவலோடு காத்திருக்கின்றனர். இத்திரைப்படத்தின் டிக்கெட் புக்கிங் விரைவில் தொடங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
