ARTICLE AD BOX
திருவாரூர் மாவட்டம், திருவாரூர் மதுவிலக்கு காவல்துறையில் பணியாற்றி வருபவர் பிரகாஷ் (40) இவர் கடந்த 2023 – 24ம் ஆண்டில் திருவாரூரில் போக்குவரத்து காவலராக பணியாற்றியபோது மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட பல்வேறு போக்குவரத்து தொடர்பான வழக்குகளை பதிவு செய்துள்ளார்.
அந்த வகையில் மாங்குடியை சேர்ந்த நபர் ஒருவரின் மோட்டார் பைக் வாகனத்துக்கும் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதாக அபராதம் விதித்துள்ளார்.
இந்த நிலையில் சம்பந்தப்பட்ட நபர் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் தனது மோட்டார் பைக்கை விற்பதற்காக முற்பட்டபோது, அவரது மோட்டார் பைக் வாகனத்திற்கு காவல்துறை விதித்த அபராதம் தொகை ரூ.10 ஆயிரம் செலுத்தப்படாமல் உள்ளதாக பதிவாகி இருந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த நபர் ஏற்கனவே காவல்துறை விதித்த அபராதத்தை கட்டி விட்ட நிலையில் மீண்டும் பணம் கட்ட வில்லை என வந்த பொழுது அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனால் அவரது வாகனம் விற்க முடியாத நிலை ஏற்பட்டது.

இது தொடர்பாக திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சம்பந்தப்பட்ட நபர் புகார் செய்ததன் அடிப்படையில், தனிப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணை செய்ததில் பிரகாஷ் கடந்த 2023 – 24 ஆம் நிதி ஆண்டின் போது 30 வழக்குகளுக்கு மேல் பதிவு செய்துவிட்டு அது தொடர்பான அபராத தொகையை அரசுக்கு செலுத்தாமல் ஏமாற்றி இருப்பது தெரிய வந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த திருவாரூர் எஸ் பி கருண்கரட் உடனடியாக தலைமை காவலர் பிரகாஷை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
மேலும் பொதுமக்கள் தங்களுக்கும் தங்களது வாகனத்துக்கும் அபராதம் விதிக்க முடியாத அளவுக்கு மிகச் சரியாக நடந்து கொள்வதோடு, அவ்வாறு அபராதம் விதிக்கும் நிலை ஏற்பட்டு தொகை செலுத்தினால் சம்பந்தப்பட்ட காவலரிடம் அதற்கு உரிய ரசீதை கேட்டு பெற வேண்டும். ரசீது கொடுக்க மறுக்கும் காவலர்கள் தொடர்பாக திருவாரூர் எஸ் பி அலுவலகத்தில் புகார் தெரிவிக்கலாம் என கூறியுள்ளார்.
