ARTICLE AD BOX
இளையராஜா தொடுத்த வழக்கு
வனிதா விஜயகுமார் இயக்கி நடித்த “மிஸஸ் & மிஸ்டர்” திரைப்படம் கடந்த ஜூலை 11 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இத்திரைப்படத்தை வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா விஜயகுமார் தயாரித்துள்ளார். இத்திரைப்படத்தில் “மைக்கேல் மதன காமராஜன்” திரைப்படத்தில் இடம்பெற்ற இளையராஜா இசையில் உருவான “சிவராத்திரி” என்ற பாடல் இடம்பெற்றிருந்தது.
இந்த நிலையில் தனது அனுமதியில்லாமல் இப்பாடல் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் அப்பாடலை “மிஸஸ் & மிஸ்டர்” படத்தில் இருந்து நீக்க வேண்டும் எனவும் இளையராஜா வழக்கு தொடர்ந்தார். இது குறித்து வனிதாவிடம் பத்திரிக்கையாளர்கள் கேட்டபோது, தான் உரிய அனுமதி பெற்றே இப்பாடலை பயன்படுத்தியுள்ளதாக பதிலளித்தார்.

இளையராஜாவின் பெயர் நீக்கம்
இந்த வழக்கு விசாரணை நேற்று நடைபெற்ற நிலையில், “பாடலை மட்டுமல்லாது இளையராஜாவின் பெயரையும் அவர்கள் படத்தில் பயன்படுத்தியுள்ளனர்” என இளையராஜா தரப்பினர் கூறினார்கள்.

இதனை தொடர்ந்து வனிதா தரப்பினர் பதிலளிக்கையில், “Echo நிறுவனத்திடம் இருந்து இளையராஜாவின் 4,850 பாடல்களை Sony Music நிறுவனம் வாங்கியுள்ளது. அந்நிறுவனத்திடம் இருந்து அனுமதி பெற்றுள்ளோம். படத்தில் இருந்து இளையராஜாவின் பெயர் நீக்கப்பட்டுவிட்டது” என விளக்கம் அளித்தனர். இதனை தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணை ஆகஸ்ட் 18 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
