ARTICLE AD BOX
வசூலை அள்ளிய அஜித் படம்
நடிகர் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளியான “குட் பேட் அக்லி” திரைப்படம் பல விமர்சனங்களை எதிர்கொண்டாலும் அஜித் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இத்திரைப்படம் ரூ.300 கோடிக்கும் மேலான வசூலையும் பெற்றது.
இளையராஜா வழக்கு…
இத்திரைப்படத்தில் இடம்பெற்ற பல காட்சிகளில் தமிழ் சினிமாவின் மிக பிரபலமான பாடல்கள் பின்னணியில் ஒலித்தன. அந்த வகையில் இளையராஜா இசையமைத்த “ஒத்த ரூபா தாரேன்”, “இளமை இதோ இதோ”, “என் ஜோடி மஞ்சக்குருவி” போன்ற பாடல்கள் இப்படத்தில் பயன்படுத்தப்பட்டிருந்தன.

அந்த வகையில் இளையராஜா, தனது அனுமதி இல்லாமல் இத்திரைப்படத்தில் தனது பாடல்களை பயன்படுத்தியுள்ளதாகவும் தனக்கு ரூ.5 கோடி நஷ்டஈடு வழங்க வேண்டும் எனவும் நோட்டீஸ் அனுப்பியிருந்தார். மேலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் இளையராஜா தரப்பில் இருந்து இது குறித்து வழக்கு தொடுக்கப்பட்டது. அப்புகாரில், “அனுமதி இல்லாமல் பயன்படுத்திய பாடல்களை படத்தில் இருந்து நீக்கவும், ரூ.5 கோடி நஷ்டஈடு கேட்டும் நோட்டீஸ் அனுப்பியதற்கு பதிலளித்த தயாரிப்பு நிறுவனம் சட்டப்பூர்வ உரிமையாளரிடம் இருந்து அனுமதி பெற்றதாக கூறியிருந்தது. ஆனால் அந்த உரிமையாளர் யார்? என்பதை தெரிவிக்கவில்லை.
தனது அனுமதி இல்லாமல் பாடல்களை பயன்படுத்தியது பதிப்புரிமை சட்டத்திற்கு விரோதமானது. ஆதலால் படத்தில் இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும், உரிய இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தது.

நீதிமன்றம் அதிரடி உத்தரவு
இந்த நிலையில் இவ்வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், “குட் பேட் அக்லி” படத்தில் இளையராஜாவின் மூன்று பாடல்களை பயன்படுத்த இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் இவ்வழக்கு குறித்து தயாரிப்பு நிறுவனம் பதிலளிக்கவும் உத்தரவிட்டு இவ்வழக்கை இரண்டு வாரங்களுக்கு ஒத்தி வைத்தது நீதிமன்றம். “குட் பேட் அக்லி” திரைப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
