ARTICLE AD BOX
ரவி மோகன் மீது வழக்கு
கோவையை சேர்ந்த பாபிடச் கோல்டு யுனிவர்ஸல் என்ற நிறுவனம், “ரவி மோகனை வைத்து இரண்டு திரைப்படங்கள் தயாரிப்பதாக ஒப்பந்தம் செய்தோம். அதில் முதல் படத்திற்கு ரூ.15 கோடி சம்பளம் பேசப்பட்டு ரூ.5.9 கோடி முன்பணமும் கொடுத்தோம். ஆனால் ஒப்பந்தத்தை மீறி ரவி மோகன் மற்ற நிறுவனங்களின் படங்களில் நடித்தார்.
இதனால் கொடுத்த முன்பணத்தை திருப்பி கேட்டோம். ஆனால் அவரோ பணத்தை திருப்பிக்கொடுப்பதாக கூறிவிட்டு இதுவரை திருப்பிக்கொடுக்கவில்லை. இப்போது அவர் சொந்தமாக படத்தயாரிப்பு நிறுவனம் தொடங்கியிருக்கிறார். ஆதலால் எங்களிடம் இருந்து வாங்கிய 5.9 கோடி முன்பணத்தை வட்டியுடன் சேர்த்து எங்களுக்கு திருப்பிக்கொடுக்க உத்தரவிட வேண்டும்” என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.

ரவி மோகன் தொடுத்த வழக்கு
இதனை தொடர்ந்து “கொடுத்த கால்ஷீட் நாட்களில் படத்தை தொடங்காமல் இழுத்தடித்துவிட்டனர். இதனால் தனக்கு ரூ.9 கோடி இழப்பீடு வழங்க வேண்டும்” என ரவி மோகன் பாபிடச் கோல்டு நிறுவனம் மீது உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இந்த இரண்டு வழக்குகளும் நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அதிரடி உத்தரவு
பாபிடச் கோல்டு நிறுவனம் தனக்கு ரூ.9 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என ரவி மோகன் தரப்பால் தொடரப்பட்ட வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும் பாபிடச் கோல்டு நிறுவனம் ரவி மோகன் மீது தொடரப்பட்ட வழக்கில், “ரவி மோகன் வாங்கிய முன்பணத்தை திரும்ப அளிப்பதில் என்ன சிரமம் உள்ளது? இதன் மூலமாக எதிர்மறை விளம்பரங்கள்தான் கிடைக்கும் அதற்கு பதில் பணத்தை திருப்பி கொடுத்துவிடலாமே?” என கேள்வி எழுப்பியதுடன் ரவி மோகன் ரூ.5.9 கோடிக்கான சொத்து ஆவணங்களை 4 வாரங்களில் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் இரு தரப்பிற்கிடையே உள்ள பிரச்சனையை தீர்க்கும் விதமாக மத்தியஸ்தரை நியமித்தும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
