ARTICLE AD BOX
டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராக பதவியேற்றதில் இருந்து வரி விதிப்பு என்ற பெயரில் பல நாடுகளை எச்சரித்து வருகிறார். இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளை வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ள அழைப்பு விடுத்திருந்தார் டிரம்ப். இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்படாவிட்டால் சம்பந்தப்பட்ட நாடுகளில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு அதிக வரி விதிக்கப்படும் எனவும் கூறி வந்தார்.
கடந்த செவ்வாய்கிழமை செய்தியாளர்களை சந்தித்த டிரம்ப், இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தத்தில் முடிவு எட்டப்படவில்லை என்றால் 20 முதல் 25 சதவிகிதம் வரி விதிக்கப்படும் என எச்சரித்திருந்தார். இந்த நிலையில் தற்போது இந்தியா மீது 25% வரி விதிக்கப்படும் என டிரம்ப் அறிவித்துள்ளார். ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் இது அமலுக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவிடம் இருந்து இந்தியா அதிகளவில் எரிப்பொருள் வாங்குவதால் இந்த கூடுதல் வரி விதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

இதற்கு முன்பாக கனடாவுக்கு 35 சதவிகிதமும், இலங்கை, ஈராக், அல்ஜீரியா ஆகிய நாடுகளுக்கு 30 சதவிகிதமும் லிபியா, மால்டோவா நாடுகளுக்கு 25 சதவிகிதமும் டிரம்ப் வரி விதித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் அமெரிக்க பொருட்களுக்கு அதிக வரி விதிப்பதாகவும் அந்த வரியை குறைக்க வேண்டும் எனவும் டிரம்ப் வலியுறுத்தி வந்த நிலையிலும் உலகிலேயே இந்தியாதான் அமெரிக்க பொருட்களுக்கு அதிக வரி விதிப்பதாகவும் அவர் கூறியிருந்த நிலையில்தான் இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது. இதுதான் இதன் பின்னணி எனவும் கூறிகின்றனர்.
