ARTICLE AD BOX
கிங் காங் வீட்டு திருமணம்
நகைச்சுவை நடிகர் கிங் காங்கின் மூத்த மகள் கீர்த்தனாவின் திருமணம் நேற்று சென்னை பெசன்ட் நகர் ஆறுபடை வீடு முருகன் கோவிலில் நடைபெற்றது. தனது மகளின் திருமணத்திற்கு முன்னணி நடிகர்கள் பலருக்கும் அரசியல் தலைவர்கள் பலருக்கும் நேரில் பத்திரிக்கை வைத்து திருமணத்திற்கு அழைப்பு விடுத்திருந்தார் கிங் காங். எனினும் நேற்று காலை திருமணத்திற்கு முத்துக்காளை உள்ளிட சில நடிகர்கள் மட்டுமே கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். எனினும் நேற்று மாலை திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு முன்னணி நடிகர்கள் பலரும் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் முன்னணி நடிகர்கள் எவரும் பங்கேற்கவில்லை என தெரிய வருகிறது. எனினும் தமிழக முதல்வர் முக ஸ்டாலின், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், முன்னாள் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், விசிக தலைவர் தொல் திருமாவளவன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.
எடைக்கு எடைக்கு சீர் வரிசையா?
இதனிடையே கிங் காங் தனது மகளுக்கு எடைக்கு எடை சீர்வரிசை செய்ததாகவும் ஹெலிகாப்டரில் இருந்து மணமக்களுக்கு பூக்களை தூவியதாகவும் தகவல்கள் பரவின. இந்த நிலையில் பிரபல சினிமா பத்திரிக்கையாளரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன் இது குறித்து பேசியுள்ளார்.
“இது போன்று பேசுவதெல்லாம் நியாமாக இருக்கிறதா? கிங் காங்கின் உண்மையான பெயர் சங்கர் ஏழுமலை. வந்தவாசிக்கு அருகேதான் அவரது ஊர் இருக்கிறது. மிகவும் கஷ்டப்பட்டவன், அப்படிப்பட்ட சூழலில் கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தவன். யாரை பற்றியும் மிகைப்படுத்தி பேசக்கூடாது. மிகைப்படுத்தி பேசினால் கூட பொய்யாக பேசக்கூடாது. அறுபடை வீடு கோவிலில் கல்யாணத்தை வைத்துவிட்டு அங்கே ஹெலிகாப்டரில் பூ தூவினார்கள் என்று சொன்னால், சொல்பவனை விடுங்கள், இதனை கேட்பவனுக்கு எங்கே மதி போயிற்று.
தயவு செய்து இது போன்ற வதந்திகளை பரப்பாதீர்கள். பாவம் வருமான வரித்துறையினர் போனார்கள் என்றால் திணறிவிடுவார் அவர்” என பயில்வான் ரங்கநாதன் பேசியுள்ளார். இதில் இருந்து கிங் காங் எடைக்கு எடை சீர் வரிசை வைத்ததாக கூறப்படும் செய்தியும் ஹெலிகாப்டரில் இருந்து மலர் தூவியதாக கூறப்படும் செய்தியும் வதந்திகள் என தெரிய வருகிறது.