ARTICLE AD BOX
ஜோரா கை தட்டுங்க
தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக வலம் வரும் யோகி பாபு சில திரைப்படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் “ஜோரா கை தட்டுங்க”. இத்திரைப்படம் வருகிற மே 16 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்த நிலையில் இத்திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது. அதில் யோகி பாபுவுடன் படக்குழுவினர் பலரும் கலந்துகொண்டனர். மேலும் இதில் தயாரிப்பாளர் தனஞ்சயன் மற்றும் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.
சம்பளம் கம்மியா வாங்குங்க
இந்த நிலையில் இவ்விழாவில் பேசிய தனஞ்சயன், “யோகி பாபு அவர்கள் கதாநாயகனாக நடிக்கும்போது மட்டும் சம்பளம் குறைவாக வாங்குங்கள். நீங்கள் காமெடி ரோலில் நடிக்கும்போது அதிகமாக வாங்கிக்கொள்ளுங்கள்” என்று வேண்டுகோள் வைத்தார்.
இதனை தொடர்ந்து பேசிய யோகி பாபு, “நான் எங்கே எனது சம்பளத்தை முடிவு செய்கிறேன்? வெளியில் இருப்பவர்கள்தான் என் சம்பளத்தை முடிவெடுக்கிறார்கள். என் சம்பளம் என்ன என்று எனக்கே தெரியாது. அப்படிப்பட்ட சூழலில்தான் நான் இருக்கிறேன். தனஞ்சயன் சார் சொன்னது போல் நான் குறைவான சம்பளமே வாங்கிக்கொள்கிறேன். நல்ல கதையுள்ள ஒரு இயக்குனரை அனுப்புங்கள். சொல்கிற சம்பளத்தை நீங்களே வாங்கிக்கொடுத்துவிடுங்கள். அதை கேட்டால்தான் இங்கே எதிரி ஆகிடுவோம்” என கூறினார். இவர் பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது.
சில நாட்களுக்கு முன்பு “கஜானா” திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் யோகி பாபு கலந்துகொள்ளாத நிலையில் தயாரிப்பாளர் ஒருவர் “7 லட்சம் கொடுத்தால்தான் யோகி பாபு” வருவார் என குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.