ARTICLE AD BOX
26 வருடங்கள் கழித்து வைரல் ஆன வீடியோ
1999 ஆம் ஆண்டு கதிர் இயக்கத்தில் வெளிவந்த “காதலர் தினம்” திரைப்படம் 90ஸ் கிட்ஸின் மிகவும் ஃபேவரைட்டான திரைப்படமாகும். ஏ ஆர் ரஹ்மான் இசையில் இத்திரைப்படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் மரண ஹிட் அடித்தன. அந்த வகையில் இத்திரைப்படத்தில் இடம்பெற்ற “ரோஜா ரோஜா” என்ற பாடல் மிகப் பிரபலமான பாடலாகும். இப்பாடலை உன்னி கிருஷ்ணன் பாடியிருந்தார். வாலி இப்பாடலை எழுதியிருந்தார்.
இந்த நிலையில்தான் பாடகர் சத்யன் மகாலிங்கம் 1999 ஆம் ஆண்டு ஒரு இசை கச்சேரியில் “ரோஜா ரோஜா” பாடலை பாடிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 26 வருடங்கள் கழித்து இந்த வீடியோ வைரல் ஆகி இருக்கிறது. சத்யனின் குரல் மிகவும் அருமையாக இருப்பதாக ரசிகர்கள் பலரும் அவரை பாராட்டி வருகின்றனர். மேலும் இப்படி ஒரு பாடகர் இருக்கிறார் என்பதும் இந்த வீடியோவின் மூலம் பலருக்கும் தெரிய வந்திருக்கிறது. பலரும் சத்யன் மகாலிங்கத்தை பாராட்டி வருகின்றனர்.

என்ன கைமாறு செய்யப்போறேன்னு தெரில…
இந்த நிலையில் சத்யன் மகாலிங்கம் தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது பாடலை ரசித்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் அவர், “26 வருடங்களுக்கு பிறகு இந்த பாடல் உங்களை வந்து சேர்ந்திருக்கிறது என நினைக்கும்போது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. நீங்கள் காட்டிய ஆதரவுக்கும் அன்புக்கும் என்னிடம் சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை.
உங்களுடைய அன்புக்கு நான் என்ன கைமாறு செய்யப்போகிறேன் என தெரியவில்லை. உங்கள் அத்தனை பேரின் பாதங்களையும் தொட்டு நான் வணங்கிக்கொள்கிறேன்” என மிகவும் உருக்கமாக பேசியுள்ளார். “26 வருடங்களுக்கு முன்பு கிடைத்திருக்க வேண்டிய பாராட்டு இப்போது கிடைத்திருக்கிறது. இது உங்கள் திறமைக்கான வெற்றி” என பலரும் சத்யனை பாராட்டி வருகின்றனர்.
