ARTICLE AD BOX
வாட்டர் மிலன் ஸ்டார்
“கஜினி” படத்தில் சூர்யா தர்பூசணி சாப்பிடும் காட்சியை ரீகிரியேட் செய்து ஃபேமஸ் ஆனவர்தான் திவாகர். இவர் பல பேட்டிகளில் தனக்கு சிவாஜி கணேசனை போல் நடிப்பு திறமை இருப்பதாகவும் தனது அழகை பல பெண்கள் விரும்புவதாகவும் கூறி வருகிறார்.
மேலும் சமீபத்திய பேட்டி ஒன்றில், “சூரியை போல் சின்ன சம்பளத்தில் எல்லாம் என்னால் நடிக்க முடியாது” என திவாகர் பேசியது ரசிகர்களை கடுப்பில் ஆழ்த்தியது. குறிப்பாக ஜிபி முத்து இவரை கடுமையாக விமர்சித்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு ஒரு யூட்யூப் சேன்னலில் பேட்டியளித்தார் திவாகர். அப்போது நிருபர் ஜிபி முத்து விமர்சித்தது குறித்து கேள்வி எழுப்ப, அதற்கு திவாகர் தனது இருக்கையில் இருந்து எழுந்து யூட்யூப் சேன்னலில் பணியாற்றிய ஊழியர் ஒருவரிடம், “ஜிபி முத்து பத்தி கேள்வி கேட்கவேண்டாம். அவங்க எல்லாம் Low Caste” என்று கூறியது சர்ச்சையாக ஆனது.

செருப்பால அடிப்பேன்…
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட ஜிபி முத்து, “எங்கள் ஊரில் எல்லா சமூகத்தினரும் இருக்கிறார்கள். மத சண்டை, சாதி சண்டை என எதுவும் வந்ததில்லை. ஆனால் இந்த தற்குறியை எங்கேயாவது நேரில் கண்டால் செருப்பை கழட்டி அடித்துவிடுவேன். சிவாஜி கணேசனே நடிப்பை இவன் கிட்ட கத்துக்கிட்டதாக சொல்கிறான்” என கடும் கோபத்தில் பேசினார்.
மேலும் பேசிய அவர், “சூரி அண்ணனை பற்றி அவனுக்கு என்ன தெரியும்? சூரி எவ்வளவு பெரிய நடிகர் தெரியுமா? சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து தற்போது மிகப்பெரிய உயரத்தில் இருக்கிறார். சூரி மிகவும் நல்ல மனிதர். சக மனிதனை மதிக்கக்கூடியவர். ஆதலால் சூரியை குறித்து அவன் பேசவும் எனக்கு கோபம் வந்துவிட்டது” என கூறினார்.

அதனை தொடர்ந்து திவாகர் சாதிய ஆணவக்கொலையை ஆதரித்து பேசியது குறித்து நிருபர் கேள்வி எழுப்பியபோது, “எனக்கு சாதி பெருமை என்பது பிடிக்காது. நமது வீடியோவை எல்லா ஜாதியினரும் பார்க்கின்றனர். எல்லாரும் பார்ப்பதனால்தான் எனக்கு சாப்பாடு கிடைக்கிறது” எனவும் பதில் அளித்தார். ஜிபி முத்துவின் இப்பேட்டியை பலரும் பாராட்டி வருகின்றனர்.
