ARTICLE AD BOX
தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்த விவசாயி சந்திரசேகரின் மகன் கவின்குமார் (26), சென்னையில் ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
விடுமுறையில் ஊருக்கு வந்த கவின்குமார், தனது தாத்தாவுக்கு சிகிச்சை அளிக்க பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் பகுதியில் உள்ள சித்த மருத்துவமனைக்கு மோட்டார் சைக்கிளில் அழைத்து வந்தார்.
சிகிச்சை முடியும் வரை தெருவில் காத்திருந்த கவின்குமாரை, அப்பகுதியைச் சேர்ந்த 24 வயது இளைஞர் சுர்ஜித் மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்று, அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்து தப்பியோடினார்.
தகவல் அறிந்த பாளையங்கோட்டை காவல்துறையினர், கவினின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், கொலையாளியாக சுர்ஜித்தை அடையாளம் கண்டனர்.
சுர்ஜித்தின் தந்தை சரவணன் ராஜபாளையம் பட்டாலியனிலும், தாயார் கிருஷ்ணகுமாரி மணிமுத்தாறு பட்டாலியனிலும் சப்-இன்ஸ்பெக்டர்களாக பணிபுரிகின்றனர்.
விசாரணையில், சுர்ஜித் தனது வாக்குமூலத்தில், “எனது அக்காவும் கவினும் பள்ளி பருவத்தில் இருந்தே நண்பர்களாக இருந்தனர். வேறு சமூகத்தைச் சேர்ந்த கவின், எனது அக்காவுடன் பேசுவது எனக்கு பிடிக்கவில்லை. அக்கா பணிபுரியும் சித்த மருத்துவமனைக்கு கவின் அடிக்கடி வந்து பேசினார். பலமுறை எச்சரித்தும் கேட்காததால், ஆத்திரத்தில் கொலை செய்தேன்,” என்று தெரிவித்தார்.
பாளையங்கோட்டை காவல்நிலையத்தில் சுர்ஜித் மீது கொலை, வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சுர்ஜித்தின் பெற்றோர் இந்தக் கொலைக்கு தூண்டுதலாக செயல்பட்டதாகவும், அவர்களையும் வழக்கில் சேர்க்க வேண்டும் எனவும் கவினின் குடும்பத்தினர் மற்றும் பல்வேறு அமைப்புகள் புகார் அளித்துள்ளனர்.
கவின் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், இது ஆணவக் கொலையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. சுர்ஜித்தின் சகோதரியிடம் நடைபெறும் விசாரணையில், இருவரும் காதலித்தார்களா என்பது குறித்து ஆராயப்படுகிறது. “விசாரணை முடிவில் முழு விவரங்கள் தெரியவரும்,” என திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் தெரிவித்தார்.
