ARTICLE AD BOX
Underrated இசையமைப்பாளர்
“ஓர் இரவு” என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் சாம் சிஎஸ். அத்திரைப்படத்தை தொடர்ந்து “அம்புலி”, “கடலை” போன்ற திரைப்படங்களுக்கு இசையமைத்த சாம் சிஎஸ், “விக்ரம் வேதா” திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மத்தியில் கவனம் பெற்றார். அத்திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்களும், அத்திரைப்படத்தின் பின்னணி இசையும் பிரம்மிப்பூட்டியது. அதனை தொடர்ந்து அவர் “கைதி” திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.
“கைதி” திரைப்படத்தின் பின்னணி இசை அத்திரைப்படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருந்தது. இப்போதும் அத்திரைப்படத்தின் பின்னணி இசை டிரெண்டிங்காக வலம் வருகிறது. இவ்வாறு அவரது இசை குறிப்பிடத்தக்க ஒன்றாக இருந்தாலும் அவருக்கு பெரிய ஹீரோ திரைப்படங்களில் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆதலால் அவரை Underrated இசையமைப்பாளர் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

சாய் அப்யங்கருக்கு குவியும் வாய்ப்புகள்
“கட்சி சேர”, “ஆச கூட” போன்ற ஆல்பம் பாடல்களின் மூலம் ரசிகர்களை துள்ளாட்டம் போட வைத்த சாய் அப்யங்கர், தற்போது 8 திரைப்படங்களுக்கும் மேல் இசையமைத்து வருகிறார். அவர் இசையமைத்த ஒரு திரைப்படம் கூட வெளிவராத நிலையிலும் தொடர்ச்சியாக சூர்யா, சிம்பு, அல்லு அர்ஜூன், கார்த்தி போன்ற முன்னணி நடிகர்களின் திரைப்படங்களுக்கான வாய்ப்புகள் அவரை தேடி வருகின்றன. இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட இசையமைப்பாளர் சாம் சிஎஸ், சாய் அப்யங்கருக்கு கிடைக்கும் வாய்ப்புகள் குறித்த கேள்விக்கு மிகவும் வெளிப்படையாக பதில் அளித்துள்ளார்.

“சாய் அப்யங்கருக்கு நிறைய படம் கிடைக்கிறது என்பது சந்தோஷமான விஷயம்தான். அவர் திறமையான நபர் என்பது எனக்கும் தெரியும். அதில் எந்த மாற்றமும் கிடையாது. ஆனால் ஆடியன்ஸ்க்கு அவரது திறன் எப்போது ரீச் ஆகும் என்றால், அவரது ஒரு படமோ அல்லது ரெண்டு படமோ ரிலீஸ் ஆகி அதில் இருக்கும் பிஜிஎம்மோ அல்லது பாடலோ வெளிவரும்போதுதான் ரீச் ஆகும்.
இன்னொரு விஷயம் என்னவென்றால், எப்பவுமே ஒரு புது ஆள் வரும்போது இப்படி பேசுவார்கள்தான். என்னையும் இதில் இணைத்து பேசுகிறார்கள். சாய் அப்யங்கருக்கு வாய்ப்புகள் கிடைக்கிறது ஆனால் சாம் சிஎஸ்க்கு கிடைக்கவில்லை என ஒப்பிட்டு பேசுகிறார்கள். ஆனால் இதை பற்றிய கவலை எனக்கு இல்லை. எனக்கு கிடைக்க வேண்டிய படங்கள் எனக்கு கிடைக்கும். அவருக்கு ஏன் வாய்ப்புகள் கிடைக்கிறது என கேள்வி கேட்கப்போவது இல்லை, அவரை நாம் வாழ்த்ததான் போகிறோம்” என பதிலளித்துள்ளார். இப்பேட்டி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
