ARTICLE AD BOX
அதிமுக வசம் உள்ள 2 ராஜ்ய சபா சீட்டுகளில் ஒன்றை தென்மண்டல நிர்வாகிக்கு வழங்க தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மதுரை: இரண்டு ராஜ்ய சபா உறுப்பினர் பதவியில் ஒன்று தென் மண்டலத்துக்கு என அதிமுக தலைமை முடிவு செய்துவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எனவே, எடப்பாடி பழனிசாமி, அதற்கான நபரைத் தேர்வு செய்வதில் மிகத் தீவிரமான ஆலோசனையில் ஈடுபட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
இந்த ராஜ்ய சபா ரேஸில் மருத்துவ அணி டாக்டர் சரவணன், ஐடி விங் செயலாளர் ராஜ் சத்யன், மாஃபா பாண்டியராஜன், கோகுல இந்திரா, மகளிரணி கிருத்திகா முனியசாமி, உசிலம்பட்டி மகேந்திரன் மற்றும் கோபுரம் பிலிம்ஸ் அன்புச்செழியன் என கட்சியினர் பலரது பெயரை தலைமையிடம் முன்வைக்கின்றனராம்.
மேலும், இதுகுறித்து தனியார் இதழிடம் பேசிய அதிமுக மூத்த நிர்வாகிகள், “தென் மாவட்டத்தில் இருந்து ராஜ்ய சபா எம்பிக்கான நபரைத் தேர்வு செய்வதன் மூலம் தன்னை சமூக ரீதியாகவும், எதிரியாகவும் சித்தரிக்கும் ஓபிஎஸ், டிடிவிக்கு செக் வைக்க எடப்பாடி திட்டமிட்டுள்ளார்.

தென் மாவட்டத்தில் உள்ள முக்குலத்தோர் சமுதாய வாக்குகளை நம்பித்தான் ஓபிஎஸ் அரசியல் செய்து வருகிறார். அதனால்தான் ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் சுயேட்சை சின்னத்தில் நின்றும் இரண்டாம் இடம் வந்தார் ஓபிஎஸ். புதுக்கோட்டை, திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டச் செயலாளர்களாக முக்குலத்தோர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் இருந்தபோதும் கூட, அவர் முதலமைச்சராக இருந்தபோது அமைச்சரவையில் அதிக இடம் கொடுத்தபோதும் அச்சமுதாயத்தினரை எடப்பாடிக்கு எதிராக திருப்பி விடும் வேலையை ஓபிஎஸ் தொடர்ந்து செய்தார்.
இதையும் படிங்க: பப்ளிக் எக்ஸாம் எழுத வந்த மாணவியிடம் Bad Touch செய்த அரசுப் பள்ளி ஆசிரியர்.. தேர்வறையில் கொடூரம்!
வடக்கு, மேற்கு, மத்திய மாவட்டங்கள் எடப்பாடி கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், தென் மாவட்டத்தில் மட்டும்தான் கட்சி நிர்வாகிகள் சலசலப்புடன் இருக்கின்றனர். எனவே, தென்மாவட்ட முக்குலத்தோர் சமுதாயத்தைச் சேர்ந்த நிர்வாகிக்கு ராஜ்யசபா உறுப்பினர் பதவியை வழங்க எடப்பாடி பழனிசாமி முடிவு செய்துள்ளார்” எனக் கூறியுள்ளனர்.
அதேநேரம், திமுக தென்மாவட்டத்தை சமூக ரீதியாக நல்ல முறையில் கையாள்வதாக ரிப்போர்ட் அதிமுக மேஜையைச் சென்றடைய, தென்மண்டலத்தில் சிறப்புக் கவனம் செலுத்தி, உடனடியாக கட்சி உள்கட்டமைப்பில் மாற்றம் கொண்டு வர இபிஎஸ் அறிவுறுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
Tags: Doctor Saravanan AIADMK, Edappadi Palaniswami, Madurai Saravanan, Rajya Sabha, அதிமுக, இபிஎஸ், எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர்செல்வம், ஓபிஎஸ், டாக்டர் சரவணன் அதிமுக, ராஜ்ய சபா