ARTICLE AD BOX
சில நாட்களுக்கு முன் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் ஓரணியில் தமிழ்நாடு என்ற பரப்புரையை தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து திமுகவினர் தமிழகம் முழுவதும் வீடு வீடாகச் சென்று மக்களை சந்தித்து உறுப்பினர்களை சேர்த்து வருகின்றனர்.

இந்த உறுப்பினர் சேர்க்கையில் பொது மக்களிடம் ஆதார் தகவல்களை சேகரித்து OTP பெற்று உறுப்பினராக சேர்க்கப்படுகின்றனர். இவ்வாறு பொதுமக்களிடம் ஆதார் தகவல்கள் பெற்று OTP பெறப்படுவது தனி மனித உரிமையை பாதிப்புக்குள்ளாக்குவதாகவும் பொது மக்களிடம் ஆதார் விவரங்களை சேகரிக்க திமுகவினருக்கு தடை விதிக்க கோரியும் திருப்புவனத்தைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை இன்று விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, ஓரணியில் தமிழ்நாடு பரப்புரையில் உறுப்பினர் சேர்க்கை நடத்தலாம், ஆனால் OTP கேட்கக்கூடாது என்று கூறி திமுகவினர் பொதுமக்களிடம் OTP பெற தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் இந்த வழக்கில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் பதிலளிக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்து இவ்வழக்கை தள்ளுபடி செய்துள்ளது நீதிமன்றம்.
