ARTICLE AD BOX
பண மோசடி புகார்?
“பாண்டியன் ஸ்டோர்ஸ்”, “பொன்னி” போன்ற பல சீரீயல்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர்தான் ரிஹானா பேகம். இந்த நிலையில் கடந்த மாதம் சென்னை பூந்தமல்லி பகுதியை சேர்ந்த ராஜ் கண்ணன் என்பவர் ரிஹானா பேகம் மீது காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதாவது ஹபிபுல்லா என்ற நபரை ஏற்கனவே திருமணம் செய்த ரிஹானா அவருடன் விவாகரத்து ஆகிவிட்டதாக கூறி தன்னை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார், ஆனால் ஹபிபுல்லாவுடன் விவாகரத்து ஆகவில்லை என தனக்கு வெகு நாட்கள் கழித்துதான் தெரியவந்ததாக அப்புகாரில் தெரிவித்திருந்தார்.
மேலும் அப்புகாரில் விவாகரத்து ஆகாமலே தன்னை இரண்டாவது திருமணம் செய்துகொண்ட ரிஹானா தன்னிடம் ரூ.20 லட்சம் வரை வாங்கி ஏமாற்றிவிட்டதாகவும் அதில் தெரிவித்திருந்தார். எனினும் இப்புகாரை மறுத்த ரிஹானா பேகம், ராஜ் கண்ணன் மீது புகாரையும் அளித்திருந்தார். ஆனால் பூந்தமல்லி காவல் நிலையத்தில் அது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

கண்ணீர் மல்க பேட்டி!
இந்த நிலையில் பூந்தமல்லி போலீஸார் இரு தரப்பினரையும் அழைத்து விசாரணை நடத்தினர். இதனை தொடர்ந்து பத்திரிக்கையாளர்களிடம் பேசிய ரிஹானா பேகம், “ராஜ்கண்ணன் நல்லவர் போல் நடித்து என்னை ஏமாற்றிவிட்டார். ரெஸ்டோ பார் வைக்க வேண்டும் என என்னிடம் பணம் கேட்டார். நான் சிறுவயதில் இருந்து வேலை பார்த்து கஷ்டப்பட்டு சேமித்து வைத்த காசை கொடுத்தேன். அந்த காசை திருப்பி கேட்ட காரணத்தினால்தான் காவல் நிலையத்தில் புகார் அளித்து எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்திகிறார். ஒரு நாள் என்னை கண்ணை மூடச்சொல்லிவிட்டு தாலி கட்டிவிட்டார். எனக்கு அதில் விருப்பமே இல்லை. அன்று இரவு வலுக்கட்டாயமாக என்னை அழைத்துச் சென்றார்” என கண்ணீர் மல்க பேட்டியளித்துள்ளார். மேலும் நீதிமன்றம் மூலமாக இதற்கு தீர்வு காணப்போவதாகவும் தெரிவித்தார்.
