ARTICLE AD BOX
தவெக சார்பில் நடைபெற்ற இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வில் விஜய் பங்கேற்ற நிலையில், அங்கு கூடிய கூட்டத்தால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
சென்னை: விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில், சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு நடக்க இருப்பதாக, சில நாள்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது. இதற்காக, கடந்த இரண்டு நாட்களாக அதற்கான ஏற்பாடுகளும் தொடர்ந்து நடைபெற்று வந்தன.
அவ்வப்போது, கட்சியின் நிர்வாகிகளான புஸ்ஸி என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா மற்றும் சிடிஆர் நிர்மல் குமார் ஆகியோர் வந்து ஆய்வு செய்து வந்தனர். அதேநேரம், கட்சி சார்பில் ஒவ்வொரு கட்சி மாவட்டத்துக்கும் தலா 5 இஸ்லாமியர்களை அழைத்து வருமாறு மாவட்டச் செயலாளர்களுக்கு உத்தரவிடப்பட்டது.
இதற்காக அவர்களுக்கு பாஸ் விநியோகம் செய்யப்பட்டிருந்ததது. அதோடு, மசூதி நிர்வாகிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், இன்று மாலை 5 மணியளவில் தவெக தலைவர் விஜய், இஃப்தார் விருந்து நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு வெள்ளை கைலி, சட்டை மற்றும் தலையில் தொப்பியுடன் வந்தார்.
இதனையடுத்து, இவரோடு இந்த நிகழ்ச்சியில் சுமார் 1,500க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் பங்கேற்றனர். இதனைத் தொடர்ந்து, இஸ்லாமியர்களின் முறைப்படி அனைவரும் தொழுகை செய்தனர். பின்னர், நோன்பு துறந்த பிறகு நோன்பு கஞ்சியை விஜய் உண்டார். தொடர்ந்து, விருந்து பரிமாறப்பட்டது.
இதையும் படிங்க: Missed Call மாதிரி கையெழுத்து இயக்கமா? உதயநிதிக்கு பாஜக பதிலடி!
இந்த நிகழ்வில் பேசிய விஜய், “மாமனிதர் நபிகள் நாயகம் அவர்களுடைய வாழ்க்கையைப் பின்பற்றி, மனிதநேயத்தையும் சகோதரத்துவதையும் பின்பற்றும் அனைத்து இஸ்லாமியச் சொந்தங்களுக்கும், என் அன்பான அழைப்பை ஏற்று இங்கு வந்தவர்களுக்கும் நன்றி. நீங்கள் அனைவரும் கலந்துகொண்டது மிக்க மிக்க மகிழ்ச்சி” எனத் தெரிவித்தார்.
பின்னர், தனது பிரசார வேனில் ஏறி, வெளியில் நின்ற ரசிகர்களுக்கு கையசைத்தவாறுச் சென்றார். இதனிடையே, விஜயைப் பார்ப்பதற்காக வந்த ரசிகர்கள், தவெகவினர் மற்றும் இஸ்லாமியர்களால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. மேலும், நிகழ்வு நடைபெறும் இடத்தில் இருந்த கண்ணாடி உடைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், பாஸ் பெற்றவர்களில் சிலரும் அனுமதிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.