ARTICLE AD BOX
மன்னிப்பு கேட்க முடியாது
“தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன் “தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது” என பேசியது கர்நாடகா மாநிலத்தில் எதிர்ப்பலைகளை கிளப்ப கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் என கர்நாடகாவைச் சேர்ந்த அரசியல்வாதிகளும் பிலிம் சேம்பரும் போர்க்கொடி தூக்கியது. ஆனால் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க முடியாது என திட்டவட்டமாக கூற, “தக் லைஃப்” திரைப்படம் கர்நாடகாவில் தடை செய்யப்பட்டது.
இத்தடையை எதிர்த்து கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் கமல்ஹாசன் வழக்குத் தொடுத்திருந்தார். இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், “கமல்ஹாசன் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் கர்நாடகாவில் போடப்பட்ட தடை நீக்கப்படாது” என கூறியது. எனினும் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்கவில்லை. ஆதலால் இத்திரைப்படம் கர்நாடகாவில் வெளியாகாது என உத்தரவிட்டது.
கர்நாடகா உயர்நீதிமன்றத்தின் இந்த தடை உத்தரவை எதிர்த்து கமல்ஹாசன் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இவ்வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், “மன்னிப்பு கேட்க வேண்டும் என நீதிமன்றம் எப்படி ஒருவரை நிர்பந்திக்க முடியும்?” என கேள்வி எழுப்பியது. மேலும், “தக் லைஃப் திரைப்படத்திற்கு தடை விதிக்க முடியாது. உரிய சான்றிதழ் பெற்ற பிறகு எந்த படத்தையும் தடை செய்ய முடியாது. படம் வெளியாகும் திரையரங்குகளில் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
சிலர் பயமுறுத்துவதால் ஒரு திரைப்படத்தை வெளியிடாமல் இருப்பதை ஏற்க முடியாது” என கூறி வியாழக்கிழமைக்குள் கர்நாடக அரசு இவ்வழக்கில் பதிலளிக்கவேண்டும் என உத்தரவு பிறப்பித்தது.
இதனால் எந்த பயனும் இல்லை
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட தயாரிப்பாளர் தனஞ்சயன், “தக் லைஃப் திரைப்படம் இனி கர்நாடகாவில் வெளியாவதில் பொருளாதார ரீதியாக எந்த பயனையும் கொடுக்காது. தக் லைஃப் படம் வெளியாகி பத்து நாட்களுக்கு மேல் கடந்துவிட்டது. இப்போது தயாரானால் கூட இரண்டு வாரங்கள் கழித்துதான் இத்திரைப்படத்தை கர்நாடகாவில் வெளியிடமுடியும். குறைந்தபட்சம் மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் வேண்டுமென்றால் அதனை வெளியிட முடியுமே தவிர எல்லா திரையரங்குகளும் இத்திரைப்படத்தை வெளியிடுவார்களா? என்றால், இரண்டு வாரங்கள் கழித்து யாரும் ஆர்வம் காட்டப்போவது இல்லை. பொருளாதார ரீதியாக கமல்ஹாசனுக்கு எந்த பயனும் இல்லை என்றாலும் உச்சநீதிமன்றத்தின் கேள்வி கமல்ஹாசனின் கொள்கை உறுதிக்கு பயந்தரக்கூடியது” என பேசியுள்ளார்.
மிகப் பெரிய எதிர்பார்ப்பிற்கு இடையே வெளிவந்த “தக் லைஃப்” திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. இத்திரைப்படம் வெளியாகி இரண்டு வாரங்கள் முடிவடையவுள்ள நிலையில் இத்திரைப்படம் ரூ.96 கோடியே வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.