ARTICLE AD BOX
நெல்லை மாவட்டம் கேடிசி நகரில் பொறியாளர் கவின் கடந்த மாதம் 27 ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலத்தில் கவின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறினார்.
பின்னர் நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் கவின் திருவுருவப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தி புதிய தமிழகம் கட்சியினர் இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், பொறியாளர் கவின் படுகொலைக்கு எதிராக நெல்லையில் எனது மகன் ஷ்யாம் தலைமையில் மிகப்பெரிய கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. கவின் கொலை வழக்கு சிபிசிஐடியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

உயர்நீதிமன்றமும் இந்த வழக்கை இரண்டு வார காலத்திற்குள் முடிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக, கவின் ஆணவ படுகொலையில் சம்பந்தப்பட்ட சுர்ஜித் பெற்றோர்களும் இதில் சம்பந்தப்பட்டிருப்பதாக கவின் பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.
கவினை தனி ஒருவராக கொலை செய்திருக்க முடியாது. இதில் சம்பந்தப்பட்ட கூலிப்படையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கவின் படுகொலை செய்யப்பட்ட பகுதியில் இன்ஸ்பெக்டர் ஆக உள்ள காசி பாண்டியன் பணியிட மாற்றம் செய்யப்பட வேண்டும்.

கவின் கொலை சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களில் அந்த கொலைக்கு ஆதரவாக பலர் பதிவிட்டு வருகின்றனர். அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். வேறு வேறு நாட்டினர் திருமணம் செய்து கொள்கின்றனர்.
தமிழர்களும் கொரியா மற்றும் ஜப்பான் நாட்டினரை திருமணம் செய்து கொள்கின்றனர். தமிழ்நாட்டில் தமிழர்களுக்குள் திருமணம் செய்வதில் என்ன தவறு இருக்கிறது. 18 வயது 21 வயது முடிந்தவர்களுக்கு தாங்கள் விரும்புவர்களை திருமணம் செய்துகொள்ள அனைத்து உரிமையும் உண்டு.
கவின் படுகொலை தொடர்புடைய அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆணவ படுகொலைக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனை வலியுறுத்தி வருகிற 17-ஆம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதிலும் போராட்டங்களை புதிய தமிழகம் கட்சி சார்பில் நடத்த உள்ளோம் என்றார் அவர்.
