ARTICLE AD BOX
பாளையங்கோட்டையில் ஐ.டி. ஊழியர் கவின் ஆணவ கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக கவினின் காதலியின் சகோதரர் சுர்ஜித் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், சுர்ஜித்தின் பெற்றோர் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் தம்பதியான சரவணன், கிருஷ்ணகுமாரி ஆகியோர்மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர்களது பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே, சுர்ஜித்தின் பெற்றோரை கைது செய்ய வலியுறுத்தி கவினின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கவின் மற்றும் அந்த பெண்ணின் புகைப்படத்தை உறவினர்கள் வெளியிட்டு, இதை ஆதாரமாக வைத்து விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில், ஆணவக் கொலையால் பாதிக்கப்பட்ட உடுமலை சங்கரின் மனைவி கௌசல்யா, சமூக வலைதளத்தில் கவினின் காதலியான சுபாஷிணிக்கு உருக்கமான வேண்டுகோள் ஒன்றை பதிவு செய்துள்ளார்.
அதில், “தோழி சுபாஷிணி, நான் கெளசல்யா. உன்னை கவின் பக்கம் உறுதியாக நிற்கும்படி கேட்டுக்கொள்கிறேன். கவின் உன் தம்பியிடம் பேச சென்றதற்காகவே இந்த நிலை ஏற்பட்டது.
நீதியின் பக்கம் நில்; நான் உன்னோடு இருக்கிறேன். சாதி வெறியர்களுக்கு எதிராக துணிவோடு நில். கவினுக்காகவும், கவின்களுக்காகவும் இறைஞ்சுகிறேன். அஞ்சாதே, நாங்கள் உன்னை தாங்கிக்கொள்கிறோம்!” என்று குறிப்பிட்டுள்ளார்.
விசாரணை தீவிரமாக நடைபெறுவதால், இச்சம்பவம் தொடர்பாக மேலும் தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
