ARTICLE AD BOX
சென்னையில் உள்ள 10,000 பொதுக் கழிப்பறைகளை சுத்தம் செய்வதற்காக தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரூ.1000 கோடி செலவிடப்பட்டும் கழிப்பறைகளின் தரம் மிக மோசமாக இருப்பதாக திமுக மீது தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்,
“சென்னையில் 1260 இடங்களில் 10,000 பொதுக் கழிப்பறைகளை சுத்தம் செய்வதற்காக தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரூ.620 கோடிகளும் ராயபுரம் போன்ற பகுதிகளில் பொதுக் கழிப்பறைகளை தனியார் மயமாக்குவதற்கு ரூ.430 கோடி என மொத்தம் ரூ.1000 கோடி செலவிடப்பட்டும் பொதுக் கழிப்பறைகளின் தரம் மிக மோசமாக இருப்பதாக வெளியாகும் செய்திகள் அதிர்ச்சியை அளிக்கிறது.

ஜனவரி 2022 ஆம் ஆண்டு ரூ.3.18 ஆக இருந்த ஒரு பொதுக் கழிப்பறையின் பராமரிப்பு செலவு செப்டம்பரில் ரூ.363.9 ஆக உயர்த்தப்பட்டது. ஆனால் முக்கால்வாசி பொதுக் கழிப்பறைகள் முறையான பராமரிப்பு இன்றி தண்ணீர், கதவு, தாழ்ப்பாள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் தரை எல்லாம் துர்நாற்றம் வீசுகிறது. இது திமுக அரசின் ஊழல் முகத்தை வெளிச்சம்போட்டு காட்டுகிறது” என பேசியுள்ள நயினார் நாகேந்திரன்,
“அலங்கோலமாக காட்சியளிக்கும் கழிப்பறைகளை பராமரிக்க ஆயிரம் கோடி செலவானது என அரசு கணக்கு காட்டுவது யார் காதில் பூ சுத்துவதற்காக? இவர்கள் கொள்ளையடிக்கும் மக்கள் பணம் யாருக்கு செல்கிறது?” எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், “திமுக தனது ஆட்சியின் இறுதிகாலத்தில் கழிப்பறையிலும் கொள்ளையடித்து கஜானாவை நிரப்பிக்கொள்ள துணிந்துள்ளது அருவருக்கத்தக்கது” எனவும் அவர் குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
