ARTICLE AD BOX
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள சாமல்பட்டி ரயில் நிலையம் அருகே உள்ள கிணறு ஒன்றில் ஒரு ஆண் மற்றும் சிறுவன் ஆகியோரின் உடல் சடலமாக மிதந்ததை அப்பகுதியினர் கண்டுள்ளனர். இத்தகவலை அறிந்து காவல் துறை சம்பவ இடத்திற்கு விரைந்தனர். உடனே தீயணைப்பு துறைக்கு தகவல் அனுப்பி சம்பவ இடத்திற்கு வரவழைத்தனர். அதன் பின் கிணற்றில் இருந்த ஆண் மற்றும் சிறுவன் ஆகியோரின் சடலத்தை மீட்டனர்.
இது குறித்த விசாரணையில் ஆணின் பெயர் பாலாஜி (37) என்றும் சிறுவனின் பெயர் கவின் (5) என்பதும் தெரிய வந்தது. இருவரும் தந்தை-மகன் எனவும் தெரிய வந்தது. இதனை தொடர்ந்து இது குறித்த தீவிர விசாரணையில் போலீஸார் இறங்கியபோது ஒரு அதிர்ச்சியான பின்னணி வெளிவந்துள்ளது.

பாலாஜியின் சொந்த மாவட்டம் திருவண்ணாமலை ஆகும். எனினும் அவர் திருப்பூரில் தையல் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். பாலாஜிக்கு அதிகபடியான கடன் பிரச்சனை இருந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை 9.30 மணிக்கு தனது மனைவியிடம் தான் சொந்த ஊரான திருவண்ணாமலைக்குச் சென்று கொஞ்சம் பணம் வாங்கி வருவதாக கூறி தனது 5 வயது மகனான கவினை அழைத்துக்கொண்டு ரயிலேறியுள்ளார்.
இதனை தொடர்ந்து அவர்கள் ரயிலில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தாலுகாவில் அமைந்துள்ள சாமல்பட்டி ரயில் நிலையத்திற்கு வந்துள்ளனர். அந்த ரயில் நிலையம் அருகே உள்ள கிணற்றில் தனது 5 வயது மகனை தள்ளிவிட்டு கொலை செய்துள்ளார். அதன் பின் பாலாஜி தானும் குதித்து தற்கொலை செய்துள்ளார். போலீஸாரின் விசாரணையில் இந்த அதிர்ச்சி சம்பவம் தெரிய வந்துள்ளது. இது சாமல்பட்டி பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
