ARTICLE AD BOX
கோவை ஜிகேஎஸ் அவன்யூ பகுதியை சேர்ந்தவர் கிரிஸ்டோஃபர் எடிசன், தனக்கு பரிமாறப்பட்ட முழு பொரித்த கோழியில் லெக் பீஸ் இல்லை என நீதிமன்றபடிகளை ஏறியுள்ளார். இது குறித்து அவர் நுகர்வோர் நீதிமன்றத்தில் கொடுத்த புகாரில், கடந்த ஜனவரி மாதம் 14 ஆம் தேதி கோவை உப்பிலிபாளையம் பகுதியில் அமைந்துள்ள மணிகண்டன் என்பவரால் நடத்தி வரும் பிரபல பிரியாணி கடைக்கு தனது குடும்பத்தினருடன் சாப்பிட சென்றதாகவும் அப்போது அங்கே முழு பொரித்த கோழி (கிரில் சிக்கன்) ஒன்றும் தந்தூரி சிக்கன் ஒன்றும் ஆர்டர் செய்ததாகவும், இதில் அவருக்கு பரிமாறப்பட்ட கிரில் சிக்கனில் லெக் பீஸ் கொடுக்கப்படவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அப்புகாரில், “லெக் பீஸ் எங்கே என்று ஹோட்டல் ஊழியரை கேட்டபோது அதற்கு சரியான பதில் அளிக்கவில்லை. மேலும் எனது குடும்பத்தினர் முன்னிலையிலேயே ஆவேசமாக பேசி என்னை மிரட்டினார்கள். இதனால் எனக்கு அவமானம் ஏற்பட்டது. மேற்கொண்டு வற்புறுத்தியதை தொடர்ந்து ஹோட்டல் ஊழியர் சமையலறைக்குச் சென்று மிகவும் தாமதமாக லெக் பீஸை கொண்டு வந்தார்.
நான் முழு கோழிக்கு பணம் கொடுத்திருந்தும் அவர்கள் லெக் பீஸை கொடுக்கவில்லை. இது நியாயமற்ற வர்த்தக நடைமுறையாகும். எனவே எனது பில் தொகையான ரூ.1,196-ஐ தனக்கு வழங்க வேண்டும், மன உளைச்சலுக்கான இழப்பீடும் வழங்க ஹோட்டல் நிறுவனத்திற்கு உத்தரவிட வேண்டும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து இந்த வழக்கை விசாரித்த கோவை நுகர்வோர் நீதிமன்றம், ஹோட்டல் உரிமையாளர் பாதிக்கப்பட்டவரின் மன உளைச்சலுக்கு ரூ.10,000 வழங்க வேண்டும் எனவும் நீதிமன்றம் செலவாக ரூ.5,000 வழங்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்துள்ளது.
