ARTICLE AD BOX
தனுஷின் பாலிவுட் அறிமுகம்
நடிகர் தனுஷ் பாலிவுட்டில் கதாநாயகனாக அறிமுகமான திரைப்படம் “ராஞ்சனா”. இத்திரைப்படம் தமிழில் “அம்பிகாபதி” என்ற பெயரில் டப் செய்யப்பட்டு வெளிவந்தது. இத்திரைப்படத்தை ஆனந்த் எல் ராய் இயக்கியிருந்தார். ஏ ஆர் ரஹ்மான் இத்திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார். இத்திரைப்படம் ஹிந்தி, தமிழ் ஆகிய இரு வேறு ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது.
ராஞ்சனா யுனிவர்ஸ்!
இத்திரைப்படத்தின் தொடர்ச்சியாக “தேரே இஷ்க் மே” என்ற திரைப்படம் தற்போது உருவாகி வருகிறது. இத்திரைப்படத்தில் தனுஷ் கதாநாயகனாகவும் கிரீத்தி சனான் கதாநாயகியாகவும் நடித்து வருகிறார்கள். இத்திரைப்படம் “ராஞ்சனா” யுனிவர்ஸுக்குள் உருவாகி வருகிறது. அதாவது “ராஞ்சனா” திரைப்படத்தில் இடம்பெற்ற கதாபாத்திரங்களும் சில அம்சங்களும் இதிலும் தொடரவுள்ளது.
இந்த நிலையில் “அம்பிகாபதி” திரைப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சியை AI தொழில்நுட்பத்தில் மாற்றியமைத்து ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இத்திரைப்படத்தில் தனுஷின் குந்தன் கதாபாத்திரம் கிளைமேக்ஸில் உயிரிழப்பது போல் காட்சிப்படுத்தியிருந்தார்கள்.
ஆனால் தற்போது தனுஷ் உயிர்பிழைப்பது போல் AI தொழில்நுட்பத்தின் மூலம் மாற்றியமைத்து வருகிற ஆகஸ்ட் 1 ஆம் தேதி ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. வருகிற ஜூலை 28 ஆம் தேதி தனுஷ் தனது 43 ஆவது பிறந்தநாளை கொண்டாடவுள்ள நிலையில் “அம்பிகாபதி” திரைப்படம் மறுவெளியீடு காணவுள்ளது குறிப்பிடத்தக்கது.