ARTICLE AD BOX
பிரபல சின்னத்திரை நடிகர் மாதம்பட்டி ரங்கராஜன் மீது அவரது இரண்டாவது மனைவி ஜாய், சிவசங்கரி யூடியூப் சேனலில் அளித்த பேட்டியில் பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
இந்த பேட்டியில், தனது கணவர் மீதான குடும்ப வன்முறை மற்றும் உணர்ச்சி ரீதியான துன்புறுத்தல்கள் குறித்து ஜாய் கண்ணீருடன் வெளிப்படுத்தியுள்ளார்.ஜாயின் கூற்றுப்படி, தான் கர்ப்பமாக இருந்தபோது, மாதம்பட்டி ரங்கராஜன் அந்தக் குழந்தை வேண்டாம் என வற்புறுத்தியதாகவும், இதனால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் தெரிவித்தார்.

இருப்பினும், ஜாய் குழந்தையைப் பெற்றெடுப்பதில் உறுதியாக இருந்ததாகக் கூறினார். ஆனால், ஒரு சம்பவத்தில், மாதம்பட்டி ரங்கராஜன் தனது மகனின் முன்னிலையில் ஜாயை கடுமையாகத் தாக்கியதாகவும், இதனால் அவருக்கு காது கேளாமை மற்றும் ஒரு கண்ணின் பார்வை நரம்பு பாதிக்கப்பட்டு பார்வை குறைந்துவிட்டதாகவும் ஜாய் கதறி அழுதார்.
வலியால் துடித்த தன்னை, மாதம்பட்டி ரங்கராஜனே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாகவும், இந்தச் சம்பவம் தனது மகன் கண்முன்னே நடந்ததாகவும் அவர் கூறினார்.

இதையடுத்து, ஜாயின் குடும்பத்தினர் மாதம்பட்டி ரங்கராஜனை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயன்றபோது, அவர் அழைப்புகளை ஏற்கவில்லை என்று ஜாய் தெரிவித்தார். மேலும், ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் படப்பிடிப்பு தளத்தில், மாதம்பட்டி ரங்கராஜன் தனது கேரவனில் வைத்து, தனது மேலாளரின் உதவியுடன் மீண்டும் தன்னைத் தாக்கியதாக ஜாய் குற்றம்சாட்டினார்.
இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, ஜாய் மாதம்பட்டி ரங்கராஜனின் காலில் விழுந்து கெஞ்சி, அவரைச் சமாதானப்படுத்தி வீட்டுக்கு அழைத்து வந்ததாகவும் கூறினார். ஆனால், ஒருநாள் படப்பிடிப்புக்குச் செல்வதாகக் கூறிவிட்டு வெளியேறிய மாதம்பட்டி ரங்கராஜன், அதன்பிறகு வீடு திரும்பவே இல்லை என்று ஜாய் கண்ணீருடன் தெரிவித்தார்.
