ARTICLE AD BOX
சேலம், நாராயண நகர் முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் மாதவராஜ்(75). இவரது மனைவி பிரேமா(67). கணவன் மனைவி மட்டும் வீட்டில் வசித்து வருகின்றனர்.
இன்று மதிய வேளையில் இவரது வீட்டிற்கு வந்த இரண்டு வாலிபர்கள் குடிப்பதற்கு தண்ணீர் வேண்டும் என்று வாசலில் நின்று கேட்டுள்ளனர். வீட்டின் முன் பகுதி இரும்பு கதவு தாளிடப்பட்டிருந்தது.
இதையும் படியுங்க: திருமணம் செய்த உடனே குழந்தை பிறக்க வேண்டுமென்றால்… சர்ச்சையை கிளப்பிய திமுக எம்பி பேச்சு!
வீட்டிலிருந்த தம்பதி தண்ணீர் கேட்டு வந்தவர்களிடம் மறுப்பு தெரிவித்து விட்டு அனுப்பிவிட்டனர். ஆனால் அந்த இரண்டு வாலிபர்கள் பக்கத்து வீட்டு மாடி படியில் ஏறி மாதவராஜ் வீட்டுக்குள் நுழைந்தனர்.
பின்னர் மாதவராஜை தாக்கிவிட்டு பிரேமாவின் கழுத்தில் இருந்த ஏழு சவரன் தங்க நகையை பறித்துக் கொண்டு, அவர்களது செல்போனையும் பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

இந்த சம்பவம் குறித்து கிச்சிப்பாளையம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்படவே, போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் தப்பி ஓடிய கொள்ளையர்கள் முகம் அருகில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

அதனைக் கொண்டு கொள்ளையர்களை தேடி வருகின்றனர். இது குறித்து மாதவராஜ் கூறும்போது தண்ணீர் கேட்டு வந்தவர்களில் ஒருவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு தங்களது வீட்டில் வெள்ளையடிப்பதற்காக வந்தவர். அதனால் காலையில் அவர் தண்ணீர் கேட்டு வந்தபோது தண்ணீர் கொடுத்தோம்.

பின்னர் மதியம் திரும்பவும் வந்து தண்ணீர் கேட்டபோது இல்லை என்று மறுத்து அனுப்பி விட்டோம். அதன் பிறகு தான் அவர்கள் பக்கத்து வீட்டு மாடிப்படியில் ஏறி வீட்டுக்குள் நுழைந்து தங்களை மிரட்டி ஏழு சவரன் நகையை பறித்துக் கொண்டு சென்று விட்டனர் என்றார். பட்டப்பகலில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
