ARTICLE AD BOX
ஆந்திர துணை முதல்வரும் ஜனசேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண் தமிழகத்தில் ஆன்மீக பயணம் மேற்கொண்டு கடந்த பிப்ரவரி மாதம் பழனிக்கு சென்றபோது அங்கிருந்த பொது மக்கள் பழனியில் இருந்து திருப்பதிக்கு கொரோனாவிற்கு பிறகு நிறுத்தப்பட்ட பஸ் சேவை மீண்டும் துவங்க வேண்டும் என கேட்டு கொண்டனர். இதனையடுத்து கட்டாயம் இந்த சேவை தொடங்கப்படும் என உறுதி அளித்திருந்தார்.
இதையும் படியுங்க: இதுதான் பாஜகவின் பெரும்பான்மைவாத ஆதிக்க அரசியல்- அறிக்கையால் அலறவிட்ட தவெக தலைவர் விஜய்…
இந்நிலையில் சொன்னது போலவே பழனியில் இருந்து திருப்பதிக்கு நேரடி பஸ் சேவையை பவன் கல்யாண் மங்களகிரியில் கொடியசைத்து தொடங்கி வைத்து திருப்பதி – பழனி இடையே மீண்டும் பஸ் சேவையை போக்குவரத்து அமைச்சர் ராம் பிரசாத் உடன் இணைந்து தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய பவன் கல்யாண் ஆறுப்படை வீடுகளில் ஒன்றாக விளங்கும் சக்தி வாய்ந்த பழனி முருகரை காணவும், கலியுக தெய்வம் ஏழுமலையானை காண திருப்பதிக்கு நேரடி பஸ் சேவை இல்லாததால் கடும் சிரமத்தை எதிர்கொள்வதாக அப்பகுதி மக்கள் கூறினார்.
அவர்களுக்கு அளித்த வாக்குறுதியின்படி போக்குவரத்து அமைச்சர் ராம்பிரசாத் அரை மணி நேரத்தில் அதற்கான உத்தரவை வழங்கினார். இதற்கு முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கும் இந்த நேரத்தில் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். தினந்தோறும் இரவு 8 மணிக்கு திருப்பதியில் தொடங்கி பழனிக்கு காலை 7 மணிக்கும் ,பழனியில் இரவு 8 மணிக்கு தொடங்கி காலை 7 மணிக்கு திருப்பதிக்கு என இரண்டு பஸ் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
பெரியவர்களுக்கு ₹ 480 சிறியவர்களுக்கு ₹ 360 என குறைந்த கட்டணத்தில் 500 கிலோ மீட்டருக்கு பாதுகாப்பான ஆர்.டி.சி. பஸ் பயணம் கொண்டு வரப்பட்டுள்ளது என்றார்.
இதில் அமைச்சர் நாதென்ல மனோகர், கந்த சஷ்டி கமிட்டியினர், பழனி குடிமக்கள் நல சங்கத்தினர், திருப்பதி எம்.எல்.ஏ. ஆரணி சீனிவாசுலு, ஆர்.டி.சி. நிர்வாக இயக்குனர் துவரகா திருமலை ராவ் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த பஸ் சேவை திருப்பதியில் இருந்து பழனிக்கு, குப்பம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, பவானி வழிதடத்தில் இயக்கப்பட உள்ளது.